பொது கழிப்பறை சுவர்களில் சமூக செய்திகள் எழுதும் பணி விரிவுபடுத்தப்படும்: நகராட்சி ஆணையர் தகவல்

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பொது கழிப்பறைகளில் வர்ணம் பூசி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக செய்திகள் எழுதப்பட்டு வருகின்றன.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பொது கழிப்பறைகளில் வர்ணம் பூசி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக செய்திகள் எழுதப்பட்டு வருகின்றன. இந்த பணி மேலும் விரிவுபடுத்தப்படும் என நகராட்சி ஆணையர் டி. சுதாகர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வசதிக்காக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பல இடங்களில் புதிதாக கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளை புதுப்பொலிவுபடுத்தும் பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
காரைக்காலில் பொது கழிப்பறை வளாகங்களை பொலிவுபடுத்தும் முயற்சியை, நகராட்சி ஆணையராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு  பொறுப்பேற்ற டி. சுதாகர் மேற்கொண்டுள்ளார்.
வர்ணம் பூசி பொலிவுபடுத்தப்படும் கழிப்பறைகளில், சமூக செய்திகள் பல எழுதப்பட்டுள்ளன. புதுநகர் பகுதியில், நகராட்சி நிதியில் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு, அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே. கணபதியால் திறக்கப்பட்டு வந்ததை, 2016-17-ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்ட நிதியில் பொலிவுபடுத்தும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுதாகர் திங்கள்கிழமை கூறியது:
நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது கழிப்பறைகள் புதுப்பொலிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வர்ணம் மட்டும் பூசி விட்டுவிடாமல்,  சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருப்போம், நமது பகுதிகளில் மரக்கன்று நடுவோம், தூய்மையை காத்து சுகாதாரம் பேணுவோம் உள்ளிட்ட பல்வேறு சமூக செய்திகள் எழுதப்படுகின்றன.
இதுபோன்று புதிதாக கட்டப்படும் கழிப்பறைக் கட்டடங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், அரசுக்குச் சொந்தமான சுற்றுச்சுவர், நிரந்தரக் கட்டடங்கள் சிலவற்றிலும் மக்களை கவரக்கூடிய தகவல்கள் எழுதப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
நகரப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த தியேட்டர் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டது. திருநள்ளாறு வீதியில் நேரு மார்க்கெட் கட்டுமானத்துக்கான இடமும் திறந்தவெளி நிலமாக இருக்கிறது. நிரந்தரமாக கட்டுமானம் செய்ய அரசு முன்வரும் வரை, இவ்விரு இடங்களையும் பொதுமக்கள் வாகன பார்க்கிங் செய்துகொள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதன்மூலம் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். நகரில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படும். மக்களுக்கும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய நிறைவு கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com