மருத்துவ தேவைகளுக்கு அறக்கட்டளைகள் உதவ வேண்டும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

மருத்துவ தேவைகளுக்கு மக்களுக்கு உதவி செய்வதும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

மருத்துவ தேவைகளுக்கு மக்களுக்கு உதவி செய்வதும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதிலும் அறக்கட்டளைகள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், பல்வேறு நிலையில் மக்களுக்கு சேவை செய்யும் விதமாக கீதாஆனந்தன் என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்து, இதன் தொடக்க நிகழ்ச்சி போலகம் சமுதாயக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச். நாஜிம் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேசியது: அறக்கட்டளை என்பது முற்றிலும் மக்களுக்கு பொருளுதவி செய்வதோடு நின்றுவிடக் கூடியது அல்ல. அறக்கட்டளை நடத்துவோருக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். இந்த அறக்கட்டளையானது விளம்பரத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ நடத்தக்கூடியது அல்ல. அறக்கட்டளை தொடங்கும் முன்னரே இந்த பொறுப்பாளர்கள் பல கட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருவதை வழக்கத்தில் கொண்டவர்கள்.
குறிப்பாக, ஏழை மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும். இதற்கான செலவுகள் அதிகமாக இருக்கலாம். அரசு சார்பில் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவித் திட்டங்கள், முதலமைச்சர் நிவாரண நிதி மூலம் உதவிகள் கிடைத்தாலும், இது காலத்தோடு கிடைத்துவிடக்கூடியது அல்ல. எனவே, நலிந்த பிரிவினருக்கு அறக்கட்டளையினர் நிதியுதவி மற்றும் பிற உதவிகளை செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.
தன்னார்வலர்களை அதிகமாக சேவையில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஏழை உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய திட்டங்கள் பல உள்ளன. இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வங்கி மூலம் தொழில் தொடங்க கடன் பெற்றவர்கள், உரிய காலத்தில் அதை திருப்பிச் செலுத்தி மீண்டும் பயன்பெற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற நல்ல சேவைகள் அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கான தேவையாகும் என்றார் அமைச்சர்.
முன்னாள் அமைச்சரும், திமுக காரைக்கால் அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் வாழ்த்துரை வழங்கினார். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் நிர்வாக அலுவலரும், மாவட்ட துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக அறக்கட்டளையின் நோக்கம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் பேசினார். காரைக்கால் மாவட்ட திமுக  இலக்கிய அணி தலைவர் அமுதா ஆர். ஆறுமுகம் வரவேற்றார்.  டி. பாஸ்கரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பலருக்கு குடிநீர் கேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com