மருத்துவ மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்: ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தல்

கால மாற்றத்தில் உருவாகும் புதுப்புது நோய்களுக்கு சிகிச்சை தரும் வகையில், மருத்துவ மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தினார்.

கால மாற்றத்தில் உருவாகும் புதுப்புது நோய்களுக்கு சிகிச்சை தரும் வகையில், மருத்துவ மாணவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை காரைக்காலில் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காரைக்கால் கல்லூரியில் 50 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் ஜிப்மர் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்வாகிறார்கள். கடந்த ஆண்டு முதலாமாண்டில் சேர்ந்த மாணவர்கள் தற்போது 2-ஆம் ஆண்டுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கான வகுப்பு தொடங்கும் நிகழ்ச்சி, கடற்கரை சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு மருத்துவ மாணவ, மாணவியரிடையே பேசியது:
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி செயல்படுவது இப்பிராந்தியக்கு கிடைத்திருக்கும் பெருமை.   மருத்துவ மாணவர்கள் முதலில் மனிதத் தன்மையை கற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவராக பணியாற்றும்போது இது மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொரு மாணவரும் சுய சிந்தனையுடன் முயன்று படிக்கும்பட்சத்தில் டாக்டர் முத்துலட்சுமியை போன்று சிறந்த மருத்துவராக வளம் வர முடியும்.
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பயிற்சி எடுத்துக்கொள்ள செல்லவுள்ளனர். இது அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அரசு மருத்துவமனையை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்து வருகிறது. ஜிப்மர் நிர்வாகம், இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த உள்ளதன் மூலம் மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் நல்ல பயன் கிடைக்கும்.
கால மாற்றத்தில் புதுப்புது நோய்கள் தாக்குகின்றன. இதற்கான காரணிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கான, தரமான சிகிச்சை தரக்கூடிய மருத்துவ அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நிலைத்த புகழை பெற முடியும் என்றார் ஆட்சியர் கேசவன்.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவப் பேராசிரியர் சத்தார்தாஸ், நுண்ணுயிரியல் பேராசிரியர் ஜெயக்குமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com