கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 சேர்க்கைக்கு அங்கீகாரம்: இன்று முதல் விண்ணப்பம் பெறலாம்

காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 சேர்க்கைக்கான அங்கீகாரத்தை புதுதில்லி கேந்திரிய வித்யாலய தலைமையகம் அளித்ததையொட்டி

காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 சேர்க்கைக்கான அங்கீகாரத்தை புதுதில்லி கேந்திரிய வித்யாலய தலைமையகம் அளித்ததையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 28) முதல் விண்ணப்பம் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் ஆர். கேசவன்  தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் தாற்காலிக இடத்தில் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு இல்லாததால், கடந்த 2015-16 -ஆம் கல்வியாண்டில் இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள், வேறு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பள்ளி மற்றும்
மாநில கல்வி வாரிய பள்ளிகளுக்கு மாறினர்.
அதுபோன்று 2016-17 -ஆம் கல்வியாண்டில் இந்த பள்ளியில் 37 மாணவ, மாணவியர் தேர்ச்சியுற்றும், இந்த பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு இல்லாததால், காரைக்காலில் வேறு பள்ளிகளை நாடினர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் எடுத்த முயற்சியால், மாவட்ட நிர்வாகம் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, தாற்காலிக வளாகத்தில் பிளஸ் 1 வகுப்பு மற்றும் ஆய்வுக் கூடத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது.  
சென்னை மண்டல கேந்திரிய வித்யாலய நிர்வாகம், கட்டுமானப் பணியின் நிறைவு அறிக்கை, மாணவர்கள் சேர்க்கைக்கு தயாராகவுள்ளோர் பட்டியல் போன்ற விவரங்களை கோரியது. இவற்றை மாவட்ட ஆட்சியர் அளித்ததன்பேரில், நிகழ் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 சேர்க்கைக்கு புதுதில்லி கேந்திரிய வித்யாலயத்தின் தலைமை நிர்வாகம் அனுமதியை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவருமான ஆர். கேசவன் புதன்கிழமை கூறியது:
காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளி வளாகத்தில் மேல்நிலை வகுப்புக்கான  வகுப்பறை, ஆய்வுக் கூட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 சேர்க்கைக்கு அனுமதி பெறும் வகையில், புதுதில்லியில் செயலர் அளவில் பேசப்பட்டது. இதையொட்டி, சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துள்ளது. வியாழக்கிழமை முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பள்ளி நிர்வாகம் வழங்கும் என்றார்.
கேந்திரிய வித்யாலயத்தின் முதல்வர் சீனிவாசன் கூறியது: பிளஸ் 1 சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், வியாழக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு, பரிசீலனைகள் முடிந்து விரைவில் வகுப்புகள் தொடங்கப்படும்.  40 மாணவர்கள் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com