சாலையில் சுற்றித் திரியும் குதிரைகள், மாடுகளால் இடையூறு

காரைக்கால் பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரைகள், மாடுகள் இரவு நேரத்தில் சுற்றித் திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன்

காரைக்கால் பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரைகள், மாடுகள் இரவு நேரத்தில் சுற்றித் திரிவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு புறம் கடல், மூன்று புறமும் தமிழக நிலப்பரப்பையொட்டிய பிராந்தியமாக விளங்குகிறது காரைக்கால். இப்பிராந்தியத்தில் பூவம் முதல் வாஞ்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் தூரம் சுமார் 25 கிலோ மீட்டர். தரங்கம்பாடி - நாகப்பட்டினத்துக்கு இடையேயான சாலை இது.
காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை அல்லாமல் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளாக காரைக்கால்  - திருநள்ளாறு சாலை மற்றும் காமராஜர் சாலை, புளியங்கொட்டை சாலை, காரைக்கால் புறவழிச்சாலை, கடற்கரை சாலைகள் உள்ளன.
காரைக்கால் கடற்கரையோரப் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் நகரப் பகுதிக்கு வருவதற்கு கடற்கரையோர சாலை ஒன்றே உள்ளது. சாலையில் வாகன விபத்துகள் மேற்சொன்ன சாலைகளிலேயே பெரும்பான்மையாக நடக்கின்றன. வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், வேகத்தடையில் தடுமாறி விழுதல் போன்றவற்றால் ஏற்படும் விபத்து எண்ணிக்கையைக் காட்டிலும், சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், குதிரைகளால் ஏற்படும் விபத்துகளே அதிகம்.
மாடுகள், இரவு நேரத்தில் சாலையில் படுத்திருப்பதும், நடமாடுவதும் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.
விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர், புதுச்சேரிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இவ்வாறு மருத்துவனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன.
காரைக்கால் காவல்நிலைய புள்ளிவிவரப்படி மாதம் 20 முதல் 30 விபத்துகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மோதி, நிகழ்விடத்திலேயே கால்நடைகள் இறந்துவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் டி. சுதாகர் கூறியது:
காரைக்கால் பகுதி சாலையில் கால்நடைகள் நடமாட்டம் மிகுதியாக இருப்பது உண்மைதான். இதுபோன்று சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக திரியும் கால்நடைகளைப் பிடித்து, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் உள்ளன.
தற்போது நகராட்சி சார்பில், காரைக்கால் பறவைப்பேட் பகுதியில் மாடுகள் கட்டுவதற்கான கூரை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, காரைக்கால் பகுதி மக்களுக்கு, கால்நடைகளை எவ்வாறு சாலையில் விடாத வகையில் பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கையும்,  கால்நடைகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com