திருநள்ளாறு புறவட்டச் சாலை பகுதியில் ரூ. 40 லட்சத்தில் கழிப்பறை கட்டுமானப் பணி: கோயில் நிர்வாக அலுவலர் தகவல்

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, வடக்கு புறவட்டச்சாலையில் ரூ. 40 லட்சத்தில் கட்டப்படும் கழிப்பறை வளாகம் ஒரு மாத காலத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என கோயில் நிர்வாக அலுவலர்

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, வடக்கு புறவட்டச்சாலையில் ரூ. 40 லட்சத்தில் கட்டப்படும் கழிப்பறை வளாகம் ஒரு மாத காலத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் புதன்கிழமை தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ரூ.2.50 கோடி திட்ட மதிப்பில் கோயில் சார்பில் பல்வேறு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வடக்குப் புறவட்டச் சாலையில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை வளாகப் பணியை கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியது: பல்வேறு கட்டட கட்டுமானங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய திட்டப் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது.
பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் கழிப்பறை வசதிகள் செய்யவேண்டுமென்ற நோக்கில், வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வடக்குப் புறவட்டச் சாலையில் வாகனங்களில் வந்திறங்கும் மக்கள், நளன் குளத்துக்கு செல்லும் வழியில் ரூ.40 லட்சத்தில் ஆண், பெண் இருபாலருக்கான 20 கழிப்பறை வசதிகள், 30 சிறுநீர் கழிப்பு வசதிகளுடன் இக்கட்டடம் அமைகிறது. இந்த கட்டட கட்டுமானம் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டுவிடும்.
இதுபோன்று ரூ.11 லட்சம் செலவில் புறவட்டச் சாலையில் சுப்ராயபுரம் செல்லும் வழியில் கழிப்பறை வளாகம் கட்டுமானம் நடைபெறவுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவுக்கான முன்னேற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இதில் பெரும்பான்மையான திட்டப் பணிகள் அடங்கும். விழா நேரத்தில் தாற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகளே எஞ்சியுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com