பருத்தி அறுவடை தொடக்கம்: குறைந்த கொள்முதல் விலையால் விவசாயிகள் வேதனை

காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி அறுவடைப் பணி தற்போது தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதால்

காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி அறுவடைப் பணி தற்போது தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதால் லாபம் போதிய அளவில் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாவட்டத்தில் விழுதியூர், பேட்டை, அகலங்கண்ணு, இளையான்குடி, புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி 5 மாத பயிர் என்ற நிலையில், நிகழாண்டு பருத்தி சாகுபடி பருவத்தில் மழையில்லை என்பது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல். எனினும் பூச்சித் தாக்குதலால் போதிய அளவில் மகசூல் கிடைக்கவில்லை என்பது பரவலான விவசாயிகளின் கருத்தாக உள்ளது. மேலும், வேளாண் துறையின் ஊக்குவிப்பு இல்லை எனவும், பூச்சிக் கொல்லி மருத்துகள் தேவையானவை. ஆனால் காரைக்காலில் இருப்பு வைக்கவில்லை. இதனால் தமிழகத்துக்குச் சென்று வாங்கி வர நேரிடும் நிலை தொடர்ந்துகொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து திருநள்ளாறு அருகே பேட்டை வட்டாரத்தில் பருத்தி அறுவடையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்த விவசாயி ரத்தினசாமி கூறியது : தை மாத நெல் அறுவடைக்குப் பின்பு பருத்தி சாகுபடி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். நல்ல நிலையில் வளர்ந்து வந்த பயிர், சப்பாத்திப் பூச்சி, வெள்ளை ஈ போன்ற பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பஞ்சு ரூ. 52 முதல் 55-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ. 37 என்ற விலைக்கு மட்டுமே வாங்குகின்றனர். இது கட்டுப்படியாகும் விலை இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பவேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்வாகத்தின் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. நியாயமான விலை நிர்ணயம் செய்து கொள்முதல் நடைபெற்றது. தற்போது அதுபோன்று செய்யப்படாததால், தனியார் நிர்ணயிக்கும் விலைக்கு தரவேண்டியுள்ளது.
பருத்தியை பொருத்தவரை எங்களது அனுபவத்தின் மூலமே பயிர் செய்கிறோம். விவசாயத் துறையின் ஊக்குவிப்பு, பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை, பாதிப்பை தடுக்கும் வகையிலான செயல்பாடுகள் அறவே இல்லை என்றார் விவசாயி ரத்தினசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com