ஒரு நாள் மழையில் உளுந்து, பயறு சாகுபடி பாதிப்பு: காப்பீடு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்காலில் நெல் அறுவடைக்குப் பிந்தைய உளுந்து, பயறு சாகுபடி செய்யப்படும் நிலையில், ஒரு நாள் பெய்த கடும் மழையில்

காரைக்காலில் நெல் அறுவடைக்குப் பிந்தைய உளுந்து, பயறு சாகுபடி செய்யப்படும் நிலையில், ஒரு நாள் பெய்த கடும் மழையில் பெரும்பான்மையான சாகுபடி பாதித்துவிட்டது. எனவே இப்பயிர் வகைகளுக்கு காப்பீடு செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்து கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு சம்பா பயிர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. ஆழ்குழாய் பாசனத்தில் செய்யப்பட்ட சில பகுதிகளில் நடந்த அறுவடைக்குப் பின்னர் தை மாத இறுதியில் உளுந்து, பயறுகளை விவசாயிகள் விதைத்துள்ளனர்.
காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு, அம்பககரத்தூர், பச்சூர் மற்றும் கோட்டுச்சேரி, திருவேட்டக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேரில் இவை பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பயிர் வகைகள் நல்ல மகசூலை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி பெய்த 17 செ.மீட்டர் மழை பெரும்பான்மையான நிலப்பரப்பு பயிரை பாதித்துவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
திருநள்ளாறுக்கு மேற்கே உள்ள நிலப்பரப்பு களிமண் பகுதியாக இருப்பதால், மழை நீர் தேங்கி வேர்கள் அழுகிவிட்டதாகவும், கோட்டுச்சேரி மற்றும் அதற்கு கிழக்குப்புறமாக உள்ள மண் பரப்பான பகுதியில் பயிரிடப்பட்டவை பாதிப்படையவில்லை. எனினும் சில இடங்களில் பூக்கள் கொட்டிவிட்டன என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் இதுபோன்ற பயிர் வகைகளுக்கு அரசு காப்பீடு செய்ய முன் வர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் கா.மதியழகன் கூறியது:  உளுந்து, பயறு வகைகளைப் பொருத்தமட்டில், காரைக்காலில் பரவலாக விவசாயிகள் விதைத்துள்ளனர். சில இடங்களில் பாதிப்பு, சில இடங்களில் பாதிப்பில்லை என்ற கலப்பு முறையில் இருக்கிறது. இதுகுறித்து துறை ரீதியில் ஆய்வு செய்த பின்னரே இறுதி விவரம் தெரிவிக்கப்படும். இந்த பயிர் வகைகளையும் காப்பீடு செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com