திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீ கணபதி ஹோமம்

திருநள்ளாறு கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தையொட்டி மகா கணபதி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தையொட்டி மகா கணபதி ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தினமும் சுவாமி புறப்பாடு, தேரோட்டம், ஸ்ரீ சனீஸ்வரபகவான் வீதியுலா, தெப்போத்ஸவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.
 இந்த திருவிழா பூர்வாங்க பூஜை தொடக்கமாக வியாழக்கிழமை ஆச்சார்யவர்ணம் என்ற நிகழ்ச்சியாக சன்னிதியிலிருந்து டி.ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் சிறப்பு மேள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சூழ கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
 கோயிலில் அனுக்ஞை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ சொர்ணகணபதி, ஸ்ரீ ஆதிகணபதிக்கு மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. ஹோமத்தில் 108 வகையான ஹோம திரவியங்கள், அருகம்புல், மோதகத்துடன் பூஜை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விநாயகர்களுக்கு 16 வகையான திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஸ்ரீ சொர்ணகணபதிக்கு தங்கக் கவசமும், ஸ்ரீ ஆதி கணபதிக்கு வெள்ளி கவசமும் அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
 தொடர்ந்து கோயிலில் கஜ (யானை) பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com