முதல்முறையாக அன்னை தெரஸா அரசுப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சியை அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சியை அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதியில் மாணவர்களுக்கென தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியும், மாணவிகளுக்கென அன்னை தெரஸா அரசு மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டுவருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தோருக்கு மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடத்தும்போது, மாணவ- மாணவியர் இவ்விரு பள்ளிகளையே விரும்புவர். கல்வித் தரம் மற்ற பள்ளிகளைக் காட்டிலும் இவ்விரண்டிலும் இருக்கும் என்பது மாணவர்கள், பெற்றோர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.
 கடந்த 1993-ஆம் ஆண்டு காரைக்கால் வடக்குப் பள்ளியாக மாணவியர்களைக் கொண்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மேல்நிலைப் பள்ளியாக செயல்படத் தொடங்கியது அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 1997-ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு அன்னை தெரஸா என பெயர் சூட்டப்பட்டது. 6 முதல் பிளஸ் 2 வரை மாணவியர்களுக்கு பாட போதனைகள் தனித்துவத்துடன் தரப்பட்டு வந்தபோதிலும், பத்தாம் வகுப்பை பொருத்தவரை 100  சதவீத தேர்ச்சி வீதம் என்பது 1993-ஆம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டது முதல் ஏற்பட்டதில்லை. நிகழாண்டு அந்த நிலையை அகற்றி, 100 சதம் தேர்ச்சி என்ற நிலையை மாணவிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த 2015-16-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளி 91.8 சதம் தேர்ச்சியை காட்டியது. இப்போது தேர்வெழுதிய 44 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் மதிப்பெண் 500-க்கு 477  பெற்றதோடு, 400 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேர் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி துணை முதல்வர் கே.கோவிந்தராஜன் வெள்ளிக்கிழமை கூறியது:  இந்த பள்ளி கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1159 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே முதன்மையானதாக தேர்வானது. மேலும் இந்த தேர்வில் வணிகவியல் பாடத்தில் 4 மாணவியரும், வணிக கணிதப் பாடத்தில் 1 மாணவியும் 100 சதம் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தனர். அதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6-ஆம் வகுப்பு தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறியபோது சேர்ந்த மாணவியர், முதல் பேட்ஜ்-ஆக  இப்போது வெளியேறுகின்றனர். இவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியை கொடுத்து செல்கின்றனர். 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பாடப் பிரிவுகளைப் போதிக்க இந்தப் பள்ளியில் 20 ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர். மாவட்டத்தில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் ஒரே பள்ளி இது மட்டுமே. உயர்நிலை வகுப்பு மாணவியருக்கு போதிய வகுப்பறைகள் இல்லாத நிலையிலும், நெருக்கடியை சமாளித்து தேர்ச்சியை பெற்றுள்ளனர். பள்ளியில் மாணவியருக்கு காலை, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டதும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், மாணவியர்களின் அயராத உழைப்பும், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினரை அவ்வப்போது அணுகி, மாணவியரின் கல்வி நிலையை கேட்டறிந்து சென்றதும், புதுச்சேரி அரசு கல்வித்துறை மாணவியருக்கு அளிக்கும் பல்வேறு சலுகைகளும் இந்த நிலை வருவதற்கு காரணமாகும். பெரும்பாலான மாணவிகள் கிராமப்புறத்திலிருந்து வந்தவர்கள். இந்த தேர்ச்சி வீதத்தை வரும் ஆண்டுகளிலும் தொடரச் செய்ய பள்ளி நிர்வாகத்தினர் அனைவரும் பாடுபடுவோம் என்றார்.
இப்பள்ளி மாணவிகளுக்கு உரிய வகுப்பறை வசதிகள் இல்லாததே பெரும் குறையாக இருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி சரிசெய்யவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com