அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளது

தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளது என புதுச்சேரி மாநில வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளது என புதுச்சேரி மாநில வேளாண் மற்றும் கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கம் சார்பில், காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், பல்வேறு தரப்பினருக்கு விருது மற்றும் விழா மலரை வெளியிட்டுப் பேசியது:
புதுச்சேரியில் நடைபெற்று வரும் வி. நாராயணசாமி தலைமையிலான அரசு, ஒவ்வொரு துறையையும் பல்வேறு நிலைகளில் சீர்படுத்தி, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளது. கல்வித்துறையிலும் பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவைகளை முழுமையாக நிறைவேற்ற மாநில அரசின் நிதிப்பற்றாக்குறையால் திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் என கல்வித்துறையில் அனைத்துத் தரப்பினருக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் நிச்சயம் கிடைக்கும். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் பிற வசதிகள் தற்போது மேம்பட்டுள்ளன. இந்நிலையை செம்மைப்படுத்த ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். தொடக்கப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் பங்காற்ற வேண்டும். தற்போது பள்ளிகளில் தினக்கூலி ஊழியர்கள் பற்றாக்குறை, முன் மழலையர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களே சுயமாக நிதி ஒதுக்கி, ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கல்வி போதித்து வரும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வருகின்றனர். ஆரம்பக் கல்வியை மாணவர்களுக்கு தரமான முறையில் நாம் தரும் போது, அரசுப்பள்ளியை நாடும் போக்கு வரும் காலத்தில் தாமாகவே அதிகரித்துவிடும் என்றார் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்.
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், கல்வித்துறை துணை இயக்குநர் ஜி. சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி, பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் காளிதாசன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத் தலைவர் முத்தமிழ்குணாளன், பொதுச் செயலர் எஸ். சுகந்தன், கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர்கள் கார்த்திகேசன், பொன். சௌந்தரராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளியில் அதிக மாணவர்களை சேர்த்த பள்ளி நிர்வாகம், நவோதய பள்ளிக்கு அதிக மாணவர்களை அனுப்பிய பள்ளி, அறிவியல் கண்காட்சியில் மாநில கண்காட்சிக்கு தேர்வான பள்ளிகள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் தேசிய விருது பெற்றுவந்த இரண்டு பள்ளி நிர்வாகத்தினருக்கு விருது வழங்கி அமைச்சர் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com