காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மையம்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் பட்ட மேற்படிப்பு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் பட்ட மேற்படிப்பு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ளதுபோன்று, காரைக்காலில் பட்ட மேற்படிப்பு மையம் (பிஜி சென்டர்) தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேளாண் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமையில் அண்ணா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், உயர்கல்வித் துறை இயக்குநர் ஒய்.எல்.என். ரெட்டி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) வி. சண்முகசுந்தரம், அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி. குணசேகரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், காரைக்கால் அண்ணா கலைக் கல்லூரி வளாகத்தில் என்ஐடி மாணவர்களுக்கென ஒதுக்கித்தந்திருந்த வளாகத்தை, பட்ட மேற்படிப்பு மையத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் திட்டமான "ரூசா' மூலம் ரூ.1 கோடி நிதி கிடைத்துள்ளதாகவும், இந்த நிதியைப் பயன்படுத்தி அண்ணா கல்லூரி வளாகத்தை பட்ட மேற்படிப்பு மையம் செயல்படும் வகையில் மேம்படுத்தவேண்டும். வரும் கல்வியாண்டு முதல் பட்ட மேற்படிப்பு மையம் தொடங்கவேண்டும் என அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, "அண்ணா கலைக் கல்லூரியில் தற்போது 8 முதுநிலைப் பிரிவுகள் உள்ளன. 189 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது இளநிலை, முதுநிலை மாணவர்கள் ஒருங்கே இக்கல்லூரியில் படிக்கின்றனர். முதுநிலைக் கல்விக்கென தனி மையம் தொடங்கப்பட்டுவிட்டால், முதுநிலைக் கல்வித் தரம் மேம்படும்.
மாணவர்கள் தீவிரமான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடமுடியும். இதற்கான வகையில் பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி அளிக்கும். காலப்போக்கில் இதன் வளர்ச்சியைக்கொண்டு பிற கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர், இந்த மையத்தில் படிக்க முன்வருவர்.
அமைச்சரின் உத்தரவுப்படி வரும் 2018-19 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அண்ணா கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com