காவிரி நீரை எதிர்நோக்கி விவசாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்

காவிரித் தண்ணீர் வரத்தை எதிர்பார்த்து காரைக்காலில் வேளாண் பணியை தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

காவிரித் தண்ணீர் வரத்தை எதிர்பார்த்து காரைக்காலில் வேளாண் பணியை தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
மேட்டூர் அணை திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது. இது கல்லணையை புதன்கிழமை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணை திறக்கப்பட்டு காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் முறையாக வரும்பட்சத்தில், அக். 12 முதல் 15-ஆம் தேதிக்குள் காரைக்கால் எல்லையை வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். காவிரித் தண்ணீர் வருவதோடு, அடுத்த மாதத்தில் பருவமழையும் தொடங்கும் என்பதை கருத்தில்கொண்டு  விவசாயிகள், தங்களது நிலங்களில் பயிரிட தயாராகி வருகின்றனர். சில இடங்களில்  ஆழ்குழாய் பாசனங்களில் விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும்,  காவிரித் தண்ணீரை நம்பி 60 சதவீதத்துக்கும் மேலான விவசாயிகள் உள்ளனர்.
இதுகுறித்து திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த முன்னணி விவசாயி பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்காலுக்குரிய 7 டி.எம்.சி. காவிரித் தண்ணீர் வர வேண்டும். தமிழகப் பகுதியில் முறைவைத்து திறக்கப்பட்டால்கூட, காரைக்காலுக்குரிய நீர் வந்து சேர வேண்டும். புதுச்சேரி அரசின் வேளாண் துறை சார்பில் காலம் தவறிய பருவத்துக்கேற்ப எந்த மாதிரியான நெல் ரகம் விதைக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் தெரிவிப்பதோடு, பயிர் பாதிக்காத வகையிலான தொழில்நுட்ப ஆலோசனை தர வேண்டும். வேளாண் நிறுவனமான பாசிக் ஊழியர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக ஒரு மாதத்துக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டத்தை கைவிடச் செய்து, பாசிக் மூலம் உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தரமானதாகவும், தட்டுப்பாடின்றியும் கிடைக்க வேளாண் துறை தலைமை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் க. மதியழகன் கூறியது:
பொதுவாக காரைக்காலில் காலத்தோடு தண்ணீர் வந்து பயிர் செய்ய தொடங்கினால் சம்பா மற்றும் தாளடி சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் செய்யப்படும். நிகழாண்டு 2 மாதம் தாமதமாகியுள்ள நிலையில் இதன் அளவு குறைய வாய்ப்புண்டு. எனினும், சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் செய்யும் வகையில் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள் என்றார்.
நீண்டகால பயிர் விதையான 1009, ஏடிடி 50, வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்களும், குறுகிய கால பயிர் விதையான ஏடிடி 43, 45 ஆகியவையும் கடந்த காலங்களில் வேளாண் துறையால் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, தரப்பட்டன. நிகழாண்டும் அதற்கேற்ப வேளாண் துறை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றனர் விவசாயிகள்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறியது: காரைக்காலுக்குரிய 7 டிஎம்சி காவிரி நீர் என்பது உரிய முறையில் பெறுவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 7 டிஎம்சி என்பதை மேட்டூர் அணை தண்ணீர் விடுப்பிலிருந்து கணக்கில் கொள்ளாமல், கல்லணை விடுப்பில் இருந்து கணக்கில் கொள்ள வேண்டும். முறைவைப்பு தண்ணீர் விடுவிக்கும்போது, காரைக்காலுக்குரிய தண்ணீர் போய் சேர்ந்துள்ளதா என்பதை தமிழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து கல்லணை திறப்பின்போது புதுச்சேரி அரசு சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்கும்போது, தமிழக அதிகாரிகளிடம் பேசுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காரைக்கால் பகுதியில் ரூ. 72 லட்சம் செலவில் அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொண்டு வேளாண் பணிகளை விவசாயிகள் தொடங்க முன்வர வேண்டும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com