டெங்கு: காரைக்கால் மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். புதுச்சேரி அரசைக் கண்டித்து தீபாவளிக்குப் பின்னர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். புதுச்சேரி அரசைக் கண்டித்து தீபாவளிக்குப் பின்னர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியில் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தரம் குறித்து நேரில் அறியும் வகையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிகிச்சை பெறுவோரிடம்  விவரங்களை கேட்டறிந்தார். மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா தலைமையில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி.உதயக்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் பேரவை உறுப்பினருக்கு விளக்கம் அளித்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேரவை உறுப்பினர் கூறியது : இந்த மருத்துவமனையில் 32 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியில் சிகிச்சை பெறுகின்றனர்.  மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள்  தரையில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தரப்படும் சிகிச்சை திருப்தியாக இருப்பதாக நோயாளிகள் கூறினர். உயர்தர சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளேன்.
  காரைக்காலில் 191 செவிலியர்கள்  பணியாற்றிவந்தனர். தற்போது 150 பேர் அளவிலேயே உள்ளனர். அண்மையில் 14 செவிலியர்களுக்கு புதுச்சேரி அரசு புதுச்சேரி பிராந்தியத்துக்கு மாற்றல் தந்துவிட்டது. இதற்கு ஈடாக புதுச்சேரியிலிருந்து இதுவரை செவிலியர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை. செவிலியர் பற்றாக்குறை நீடிப்பால் சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு சிரமம் நிலவுகிறது.
ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் காரைக்கால் மருத்துவமனையை ரூ.30 கோடியில் மேம்படுத்தும் அறிவிப்பை செய்தது. ஆனால் திட்டப்பணி தொடங்கப்படவில்லை. புதுச்சேரி அரசும் இந்த மருத்துவமனையை  தரம் உயர்த்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆள் பற்றாக்குறையை தீர்க்கவும் நடவடிக்கை இல்லை. காரைக்காலில் மருத்துவ வசதி ஏற்படுத்துவதில் புதுச்சேரி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்குப்  பின்னர் சில நாள்களில், அரசைக் கண்டித்து மக்களைத் திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அசனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com