பட்டாசு கடை அமைக்க தீபாவளி முதல் நாள் வரை உரிமம்

காரைக்காலில் பட்டாசு கடை நடத்த தீபாவளி முதல் நாள் வரை உரிமம் வழங்கும் பணியை வருவாய்த்துறை மேற்கொண்டது.

காரைக்காலில் பட்டாசு கடை நடத்த தீபாவளி முதல் நாள் வரை உரிமம் வழங்கும் பணியை வருவாய்த்துறை மேற்கொண்டது.
தீபாவளி பண்டிக்கைக்கு பட்டாசு வியாபாரம் செய்வோர், வருவாய்த்துறையில் 2 மாதத்துக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். உரிய விதிகளின்படி கடை அமைக்கப்படும் என்கிற உறுதிமொழி வாங்கிக்கொண்டு, இடங்களை ஆய்வு செய்தல், தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் கருத்துகளை வாங்கிக்கொண்டு வருவாய்த்துறை உரிமம் வழங்கும். இதன்பிறகு பட்டாசு வியாபாரம் தொடங்கப்படுவது நடைமுறை.
காரைக்கால் மாவட்டத்தில் 78 பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு சில நாள்களுக்கு முன்பு வருவாய்த்துறை வட்டாட்சியர் ஸ்ரீஜித் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். விதிகளின்படி கடை அமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டு, உரிய அறிவுறுத்தல்களை கடைக்காரர்களுக்கு தெரிவித்தனர்.
உரிமம் பெற்ற பின்னரே பட்டாசுக் கடைகள் நடத்தப்படவேண்டிய நிலையில், பெரும்பாலானவர்களுக்கு தீபாவளி முதல் நாளான செவ்வாய்க்கிழமை உரிமத்தை வருவாய்த்துறையினர் வழங்கினர்.
இதுகுறித்து மாவட்ட துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே. பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, பட்டாசுக் கடைகள் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் நடத்தத் தொடங்குகின்றனர். இதன் பிறகு உரிய விதிகளின்படி கடை அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. வருவாய்த்துறை மட்டுமல்லாது மற்ற துறைகளின் கருத்துகளையும் கேட்க வேண்டியுள்ளது. இதுவரை 70 சதவீதத்தினருக்கு உரிமம் வழங்கப்பட்டு விட்டது. எஞ்சியோருக்கு தற்போது வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
துறையினர் தரப்பில் கூறும்போது, உரிமத்துக்கு விண்ணப்பிப்போர் கடையை தாமதமாக திறப்பதாலேயே இந்த நிலை இருக்கிறது. இதுவரை சிலர் உரிமத்துக்கு பணம் செலுத்தவில்லை. உரிமம் தயார் செய்துவைத்தும் இதுவரை வாங்க வராமல் உள்ளனர்.
பெரும்பாலானோர் தங்களது இடம் தேடி வருவாய்த்துறையினர் வந்து தர வேண்டும் என எண்ணுகின்றனர். அரசுத்துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததும் ஒரு காரணம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com