வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எம்எல்ஏ ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் முக்கிய வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில், நகரப் பகுதியில் நடக்கும் பணியை

காரைக்கால் மாவட்டத்தில் முக்கிய வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில், நகரப் பகுதியில் நடக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உத்தரவின்பேரில், காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால்கள் தூர்வார ரூ. 22.50 லட்சம் நகரமைப்புக் குழும நிதியும், திருநள்ளாறு, நெடுங்காடு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் முக்கிய வடிகால்கள் தூர்வாருவதற்கு அரசு நிதி ரூ. 50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தூர்வாரும் பணிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. காவிரி நீர் வரக்கூடிய வடிகால்கள் தூர்வாரும் பணிகள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகின்றன.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள முக்கியமான வடிகால்களான காரைக்கால் வாய்க்கால், அன்னுசாமி வாய்க்கால், கும்சக்கட்டளை வாய்க்கால் ஆகியவையும், பிற துணை வாய்க்கால்களும் பெருவாரியாக புதர் மண்டி, கழிவுகள் தேங்கி தண்ணீர் எளிதில் செல்லமுடியாத வகையில் அடைபட்டுக் காணப்படுகிறது. நகரப் பகுதிக்குள் மரியம் நகர், கோல்டன் நகர், பி.எஸ்.ஆர். நகர் உள்ளிட்டவற்றின் வழியே செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். ஞானப்பிகராசம் வீதி, முடுக்குத் தெரு, லயன் கரை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் செல்லும் சாக்கடை வசதிகள் முறையாக இல்லாததால் பாதிப்பு நேரிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
ஆய்வுப் பணியின்போது பேரவை உறுப்பினர் அசனா கூறும்போது,  நகரப் பகுதிக்குள் உள்ள வடிகால்கள் தீவிரமாக தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்குள் முடிக்கத் திட்டம் வகுத்து பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். பணிகள் நடைபெறுமிடங்களில் அதிகாரிகள் அவ்வப்போது பார்வையிட்டு, பணியில் தொய்வு ஏற்படாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். லயன்கரை உள்ளிட்ட சில குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடை வசதி குறைபாடு மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் சாலை மற்றும் சாக்கடை வசதி மேம்படுத்த உரிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும் என மக்களுக்கு உறுதியளித்துள்ளேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com