புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது: முதல்வர் வி.நாராயணசாமி

அரசின் நடவடிக்கையால், புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது என முதல்வர் வி. நாராயணசாமி கூறினார்.

அரசின் நடவடிக்கையால், புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது என முதல்வர் வி. நாராயணசாமி கூறினார்.
காரைக்காலில் ஓ.என்.ஜி.சி., பி.எஸ்.என்.எல்., பி.பி.சி.எல். நிறுவனத்தின் நிதியுதவி ரூ.88.72 லட்சம் செலவில், 23 இடங்களில் 3 சுழலும் கேமரா உள்ளிட்ட 49 புல்லட் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படுகிறது. இதை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி காரைக்கால் காமராஜர் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி பேசியது:
 புதுச்சேரி மாநிலத்தில்  பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறியவும்,  பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் உதவும்.  புதுச்சேரியில் முந்தைய நிலையைக் காட்டிலும்  குற்றச் சம்பவங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எங்கள் ஆட்சியில், குண்டர் சட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆயுதபூஜையையொட்டி, 3 நாள் விடுமுறையில் புதுச்சேரிக்கு சுமார் ஒரு லட்சம் சுற்றுலாவினர் வந்துள்ளனர். இது மாநிலத்தில் அமைதி நிலவுவதை எடுத்துக்காட்டுகிறது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி அமலாக்க நடவடிக்கையினால் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கும் பாதிப்பு வெகுவாக ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.40 கோடி வரி இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை ஈடுகட்ட மத்தியிலிருந்து நிதி கேட்டுப் பெற்றுள்ளோம்.  திட்டமில்லா செலவு தற்போது உயர்ந்துள்ளது. மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க நிதி அமைச்சரை வலியுறுத்தினேன். இக்கோரிக்கையை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
மாநிலத்தில் தொழிற்சாலைகள் அதிகரிக்கவும், சுற்றுலா மேம்படவும், சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவும், மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
மாநிலத்தில் 254 அரசுடைமை வங்கிகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றின் லாபத்தில் 3 சதவீதம் அந்த மாநிலத்துக்கு தரவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நிறுவனங்கள் அவ்வாறு தருவதில்லை. விதியின்படி மாநிலத்துக்கு நிதியுதவி அளிக்க நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
புதுச்சேரியில் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்தப்படியாகும் செலவுக்கும், திட்டமில்லா செலவுக்காகவும் ரூ.1,250 கோடி தேவையிருக்கிறது. அடுத்த வாரம் புதுதில்லி சென்று நிதி அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளேன். புதுச்சேரியின் 4 பிராந்தியங்களையும்  அரசு சமமாகப் பார்க்கிறது. காரைக்கால் புறக்கணிப்பு என்ற கோஷம் அகற்றப்பட்டுள்ளது. காரைக்கால் காவல் துறைக்கு முதல்கட்டமாக 5 புதிய வாகனங்களும், அடுத்த ஒரு மாதத்தில் கூடுதலாக 5 வாகனங்களும் அனுப்பிவைக்கப்படும் என்றார் முதல்வர்.
வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், புதுச்சேரி டி.ஜி.பி. சுனில்குமார் கௌதம், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன், பி.எஸ்.என்.எல். தலைமைப் பொதுமேலாளர் பி.சந்தோசம், ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர் சுபீர் கடாஜி ஆகியோர் பேசினர். பி.பி.சி.எல். கண்காணிப்புப் பொறியாளர் ராமச்சந்திரன் சந்தோஷ், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் வம்சீதரரெட்டி, மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com