திருநள்ளாறில் மத்தியக் குழுவினர் ஆய்வு

நகரத்துக்கு இணையாக கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருநள்ளாறு பகுதியை மேம்படுத்தும் வகையில் மத்தியக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

நகரத்துக்கு இணையாக கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருநள்ளாறு பகுதியை மேம்படுத்தும் வகையில் மத்தியக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ரூர்பன் மிஷன் என்கிற நகரத்துக்கு இணையாக கிராமப்புறத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் கிராமப்புற மேம்பாட்டுக்கு குறித்த நிதி ஒதுக்கீடு செய்வது இதன் முக்கிய அம்சமாகும். புதுச்சேரி மாநிலத்தில், புதுச்úரி பிராந்தியம் பாகூர் மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் திருநள்ளாறு ஆகியவற்றில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் வகையில் இரு பகுதிகளையும் அரசு தேர்வு செய்தது.
இதன்படி, திருநள்ளாறு பகுதி மக்களிடமும், அரசுத்துறை அதிகாரிகளிடமும் கருத்துகளைக் கேட்டறியும் வகையில் ரூர்பன் மிஷன் அமைப்பின் முதன்மை திட்ட மேலாளர் வினிதா ஹரிகரன், தெற்கு மண்டல மேலாளர் பிரசாந்த் கிரன் ஆகியோர் கொண்ட மத்தியக் குழுவினர் காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்தனர். பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேசியது: மிஷன் மூலம் மாநிலத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பயன்படுத்திக்கொள்ள அரசுத்துறை அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். திருநள்ளாறு பகுதியில் உள்ள கிராமங்களை மிஷன் தேர்வு செய்துள்ளதால், நகரத்துக்கு இணையாக திருநள்ளாறு பகுதியில் உள்ள கிராமங்களை பல்வேறு நிலையில் மேம்படுத்த எந்தெந்த துறைகளில் என்னென்ன தேவைகள் இருக்கிறது, அதை மேம்படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து உரிய திட்ட அறிக்கை தயார் செய்து ரூர்பன் மிஷனுக்கு அனுப்ப வேண்டும். அதற்கேற்ப துறைகள் தயார் நிலையை அடைய வேண்டும் என்றார்.
மத்திய அரசு, ரூர்பன் மிஷன் நாடு முழுவதும் எந்தெந்த திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, திட்டப்பணிகள் செயல்படுத்தி வருகிறது என்பது குறித்து மத்தியக் குழுவினர் விளக்கிக் கூறினர்.
மிஷன் மூலம் ஒரு திட்டத்துக்கு 30 சதவீத நிதி ஒதுக்கப்படும், எஞ்சிய 70 சதவீதம் நிதியை மத்திய அரசின் துறை ரீதியில் உள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பெற்று திட்டப்பணியை நிறைவேற்றலாம்.
திருநள்ளாறு பகுதி கிராமங்களை மேம்படுத்த வேண்டியது குறித்து திட்ட அறிக்கையை தயார் செய்து அளிக்கும்படியும், ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட கருத்துகள், பொதுமக்களிடம் கேட்டறிந்த தகவல்களை மத்திய அரசுக்கு இக்குழு சமர்ப்பிக்கும் என மத்தியக் குழுவினர் தெரிவித்தனர்.
காரைக்காலின் அனைத்து அரசுத்துறை உயரதிகாரிகளும் கலந்துகொண்டு, சாலை, கல்வி, மருத்துவம், வடிகால், வேளாண்மை, குடிநீர், சுயதொழில் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து விளக்கினர்.
இதைத் தொடர்ந்து, திருநள்ளாறு பகுதியில் பூமங்களம் கிராமம், சேத்தூர் பகுதியில் ஆற்றங்கரைத் தெருவுக்கு சென்ற மத்தியக் குழுவினர், கிராமப்புற மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
முன்னதாக இந்த கூட்டத்தில் புதுச்சேரி டி.ஆர்.டி.ஏ. அமைப்பின் திட்ட இயக்குநர் ருத்ரகௌடு, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், துணை ஆட்சியர் எஸ்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட துறையினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com