மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் சமுதாயக் கூடங்களின் பராமரிப்புப் பணி: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் சமுதாயக் கூடங்களின் பராமரிப்புப் பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரிடம்

காரைக்கால் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் சமுதாயக் கூடங்களின் பராமரிப்புப் பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்படும் என புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்திற்குள்பட்ட இரண்டு இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்களின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமை வகித்தார். திருமலைராயன்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்  சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, சமுதாயக் கூடங்களை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறியது: 
திருமலைராயன்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரின் முயற்சியால், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நிரவி புது தைக்கால் தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பிலும், ஆற்றங்கரைபேட் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை நிதி, சட்டப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சமுதாயக்
கூடங்கள் அந்தந்தப் பகுதி மக்களால் உரிய முறையில் பராமரிக்கப்படாததாலும், மின் கட்டணம், தண்ணீர் வரி போன்றவை செலுத்தாதக் காரணத்தாலும் இன்று அவை பயன்பாட்டுக்கு உகந்த வகையில்
இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்து, இனிமேல் கட்டப்படக்கூடிய சமுதாயக் கூடங்களை அரசிடம் பதிவுபெற்ற, ஆண்டுதோறும் கணக்குத் தணிக்கை செய்யப்பட்டு, சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைத்து அதன் மூலம் பராமரிப்பு, நிர்வாகம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு சமுதாயக் கூடங்களும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், காரைக்கால் நகராட்சி ஆணையர் டி. சுதாகர், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com