கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

காரைக்கால் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. 

காரைக்கால் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. 
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். இதில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எஸ். ராஜேந்திரன், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
திருமலைராயன்பட்டினம் மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துகளில் சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் தேதியக் கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆணையர்கள் ஜான் அரேலியஸ், ரவி உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். 
நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆணையர் ஜி.காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேரு நகர் 6-ஆவது குடியிருப்பு மற்றும் தலத்தெருவில் குடியிருப்பு மக்கள் ஏற்பாடு செய்திருந்தத நிகழ்ச்சியில், காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா தேசியக் கொடியேற்றிவைத்தார். 
காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை நிலையத்தில் கமாண்டன்ட் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கடலோரக் காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். காரைக்கால் என்ஐடியில் தேசியக் கொடியை இயக்குநர் கே. சங்கர நாராயணசாமி ஏற்றி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். தூய்மை இந்தியா திட்ட உள்ளிருப்புப் பயிற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். 
 காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் எஸ். சுபாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காரைக்கால் பகுதி நிரவியில் செயல்படும் கேந்திரிய வித்யாலயாவில், பள்ளி முதல்வர் (பொ) ராம்கணேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. ரேவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிரவி ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில், ஓஎன்ஜிசி பொதுமேலாளர் குருராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியர் ஏ. பாலசுப்ரமணியன்  தலைமையில் முன்னாள் ராணுவ வீரர் இ. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி துணை முதல்வர் கனகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். 
திருப்பட்டினம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குழு போதகர் (பொ) சுந்தரமூர்த்தி உதயகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி முதல்வர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அலுவலக வாயிலில் தலைவர் வி. ஆனந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com