காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டம்: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேச்சு

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஏற்றிவைத்து

காரைக்காலில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஏற்றிவைத்து, புதுச்சேரி அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள், திட்டமிட்டிருக்கும் திட்டங்கள் குறித்து உரை நிகழ்த்தினார்.
காரைக்கால் கடற்கரை சாலையில் 72-ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தேசியக் கொடியேற்றிவைத்தார்.  பின்னர் புதுச்சேரி காவலர்கள், இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய மாணவர் படையினர், பள்ளி மாணவ, மாணவியரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியது :  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் அந்தந்த மாநிலத்தில் சுதந்திர தின கொடியேற்றிவைக்கும் உரிமையை பெற்றுத்தந்த மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை இத்தருணத்தில் நினைவுகூர்வது சிறப்பாகும். வேளாண் துறையை அரசு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையாக பெயர் மாற்றம் செய்து பல உன்னத திட்டங்களை நிகழாண்டு செயல்படுத்த உத்தேசித்துள்ளது. 
நிகழாண்டு அதிகபட்ச மகசூல் எடுக்கும் உழவருக்கு அரசு சிறப்பு பரிசு அளிக்கவுள்ளது.
கிராமப்புற மகளிர் வருமானத்தை மேம்படுத்த தேனீயும் நானும் திட்டம் செயல்படுத்தப்படும். தேனீ வளர்ப்புப் பயிற்சியும் தரப்பட்டு 40 சதவீத மானியத்தில் உபகரணங்கள் தரப்படும்.
மாடித்தோட்டம் அமைக்க நிகழாண்டு 75 சத மானியத்தில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான விதை, உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் கொண்ட மினி கிட்ஸ் 500 பேருக்கு வழங்கப்படும்.
காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை வேளாண் பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும். வேளாண்மை, கால்நடை மருத்துவக் கல்வி, வேளாண் அறிவியல் நிலையங்கள் ஆகிவை ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்படும்.
காரைக்காலில் 230 கிலோ வாட் தானியங்கி துணை மின் நிலையம் அடுத்த ஓரிரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.  தூய்மை இந்தியா திட்டத்தில், காரைக்கால் பகுதியில் தனியார் மற்றும் நகராட்சியால் அகற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க, நகராட்சி மூலம் கழிவுநீர் கசடு அகற்றும் மேலாண்மைத் திட்டம் ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும்.
காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் தேவையான உபகரணங்கள் வாங்க, கட்டடம் புதுப்பிக்க ரூ.30 கோடி ஜிப்மர் நிர்வாகம் தந்துள்ளது. இந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய பொதுப்பணித்துறை செயல்படுத்தவுள்ளது.
என்.ஆர்.எச்.எம். திட்டத்தில் நடப்பாண்டில் மூத்த குடிமக்களுக்கான தனி சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படவுள்ளது. புதுச்சேரியின் தலைமை மருந்தக கிடங்கின் கிளை காரைக்காலில் விரைவில் தொடங்கவுள்ளது உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளை விளக்கியும் அமைச்சர் பேசினார்.
அணிவகுப்பில் இந்தியன் ரிசர்வ் பட்டாலின் காவல் பிரிவுக்கு முதல் பரிசும், அண்ணா அரசு கலைக் கல்லூரி முதுநிலை என்.சி.சி. மாணவர்களுக்கும்,  இளநிலைப் பிரிவில் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.  கலை நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி,  திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி  முறையே  முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்றன. 
கடந்த பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும், அரசுத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், அரசுத்துறை உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தில்...
அரசு மற்றும் பொதுமக்கள் தரும் ஆதரவில் ஓ.என்.ஜி.சி. வளர்ச்சிக்கான பணிகளில் தீவிரமாக பாடுபடும் என ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் மேலாளர் குல்பிர்சிங் கூறினார்.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் நிர்வாக அலுவலகத்தில் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றிவைத்து, நிர்வாக இயக்குநரும், அசெட் மேலாளருமான குல்பிர்சிங் பேசியது :  
ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வுத் திட்டம் (சிஎஸ்ஆர்) மூலமாக தனி நபர் கழிப்பறை கட்டுதல், பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, குடிநீர் மற்றும் கிராமத்தில் சாலை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு நிதியுதவி செய்துவருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆதரவையும் திட்டங்கள் மூலம் ஓ.என்.ஜி.சி.  வழங்குகிறது.
  சமூக மேம்பாட்டில் குறிப்பாக விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்காக ஓ.என்.ஜி.சி. தமது பங்களிப்பை செய்துவருகிறது. ஓ.என்.ஜி.சி.யுடன் கைகோர்த்து வளர்ச்சிக்கான பாதையில் பயணிப்போருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசு மற்றும் பொதுமக்கள் தரும் ஒத்துழைப்பில் சிறந்த வளர்ச்சியை ஓ.என்.ஜி.சி. கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்துக்கும்  மக்களும் முழு ஆதரவு தரவேண்டும் என்றார் அவர்.
 ஓ.என்.ஜி. சி.பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக ஓ.என்.ஜி.சி. பாதுகாவலர்கள் கொடி அணிவகுப்பு மரியாதையை அசெட் மேலாளர் ஏற்றார்.
நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

காரைக்கால் துறைமுகத்தில்...
காரைக்கால் துறைமுகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில், தேசியக் கொடியேற்றிவைத்து, மகளிர் குழுவினருக்கு புடவைகள் வழங்கப்பட்டன.
காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூரில் அமைந்துள்ள காரைக்கால் துறைமுகத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. துறைமுக நிர்வாக துணைத் தலைவர் கேப்டன் தியாகராஜன் தேசியக் கொடியேற்றிவைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது: துறைமுகத்தில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் துறைமுகம் பன்முக வளர்ச்சியடைந்துள்ளது. துறைமுகத்தின் மூலம் சுற்றுவட்டார மக்களின் மேம்பாட்டுக்கான உதவிகளை நாம் செய்கிறோம். 
துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம்  துறைமுகத்தில் பணியாற்றுவோர் மட்டுமல்லாது பிறருக்கும் நல்ல பயன் கிடைக்கும். மரங்கள் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. துறைமுக தரப்பினரும், துறைமுகம் சார்ந்த பகுதியினரும் இதில் ஈடுபாடு காட்டவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், கீழவாஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினருக்கு இலவசமாக புடவைகள் வழங்கப்பட்டன. துறைமுக வளாகத்தில் மரக்கன்றுகளை அதிகாரிகள் நட்டனர்.  இதில் துறைமுக நிர்வாக பொதுமேலாளர்  ராஜேஷ்வர்ரெட்டி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com