திருநள்ளாறில் அனுமதியின்றி சாலையோரத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பதாகைகள் அகற்றம்

திருநள்ளாறில் அனுமதியின்றி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகைகளை போலீஸார் பாதுகாப்புடன் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.

திருநள்ளாறில் அனுமதியின்றி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகைகளை போலீஸார் பாதுகாப்புடன் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் வியாழக்கிழமை அகற்றியது.
புதுச்சேரி மாநிலத்தில் டிஜிட்டல் பதாகைகள் பயன்பாட்டுக்கு தடை விதித்த அரசாணை அமலில் உள்ளது. ஆனால்,  இதை பொருட்படுத்தாமல் நகரம், கிராமங்களில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிறிய, பெரிய அளவில் டிஜிட்டல் பதாகைகள் அரசியல் கட்சியினரும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடத்துவோரும் வைக்கின்றனர்.
குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி பெற்று வைக்க, தடை விதித்த அரசாணையில் தளர்வு செய்யப்பட்டது. ஆனால், அதையும் மீறி செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில்,  மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கு அண்மையில், அனுமதியின்றி சாலையோரப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பதாகைகளை அகற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் வியாழக்கிழமை நகரப் பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகைகளை அகற்றியது. துணை வட்டாட்சியர் மதன்குமார், காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், மர்த்தினி, ராஜசேகரன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட சுமார் 50 காவலர்கள் பாதுகாப்புடன் பஞ்சாயத்து நிர்வாகம் டிஜிட்டல் பதாகைகளை அகற்றியது.
இதுகுறித்து, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எஸ்.ராஜேந்திரன் கூறியது : மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் திருநள்ளாறில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பதாகைகள் அகற்றம் செய்யப்பட்டன.
 பஞ்சாயத்து நிர்வாகத்தின் விதிகளின்படி கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்ற பதாகைகள் அப்படியே குறிப்பிட்ட கால அளவில் இருக்கும். டிஜிட்டல் பதாகைகளுக்கு சதுர மீட்டருக்கு ரூ.100 பஞ்சாயத்து நிர்வாகம் கட்டணமாக வசூலிக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வைக்க ஒரு நாளைக்கு அனுமதி தருகிறது.
ஆனால், அனுமதியில்லாமல் சில இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தது. ஆட்சியரின் உத்தரவின்பேரில், இவை போலீஸார் மற்றும் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அகற்றம் செய்யப்பட்டன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com