திருநள்ளாறில் கேந்திரிய வித்யாலயத்துக்கு நிலம்: முதல்வரிடம் பேசி நடவடிக்கை: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தகவல்

திருநள்ளாறில் கேந்திரிய வித்யாலயா கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குவது குறித்து புதுச்சேரி முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

திருநள்ளாறில் கேந்திரிய வித்யாலயா கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குவது குறித்து புதுச்சேரி முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா, காரைக்கால் நகரப் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக இடத்தில் தொடங்கப்பட்டது. தற்போது 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுடன் நிரவி பகுதியில் தற்காலிக வளாகத்தில் இயங்கிவருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கித்தரவேண்டும் என கேந்திரிய வித்யாலயத் தலைமை புதுச்சேரி அரசை வலியுறுத்திவருகிறது. இதற்கான கட்டுமானத்துக்கு ரூ.30 கோடி வரை ஒதுக்கீடு செய்ய முடியும் எனவும் கேந்திரிய வித்யாலயத் தலைமை ஏற்கெனவே தெரிவித்தது. ஆனால் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படாததால், பள்ளி தற்காலிக இடத்திலேயே இயங்கிவருகிறது.
திருநள்ளாறு பகுதி பூமங்களம் கிராமத்தில், கோயில் நகர  மேம்பாட்டுத் திட்டத்துக்காக கோயில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதில் கேந்திரிய வித்யாலயப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கவும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது தடை விலக்கப்பட்டு, பூமங்களம் நிலத்தில் மண் நிரப்பும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், பூமங்களம் பகுதியில் கேந்திரிய வித்யாலய கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்க வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை, கேந்திரிய வித்யாலயத்தின் பெற்றோர்கள் பலர் திருநள்ளாறில் வியாழக்கிழமை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து  பெற்றோர் சுந்தரமூர்த்தி உதயகுமார் கூறும்போது, பெற்றோர்களின் நியாயமான கோரிக்கையை அமைச்சர்  கேட்டார். பூமங்களம் நிலப்பரப்பில் கேந்திரிய வித்யாலயத்துக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதல்வர், ஆட்சியரிடம் பேசுவதாக தெரிவித்தார். திருநள்ளாறு பகுதியில் இந்தப் பள்ளியின் நிரந்தரக் கட்டடம் அமைவதை பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. காரைக்கால் பள்ளியின் மாணவர்கள் பலரும், பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளுக்காக பல ஊர்களில் உள்ள கேந்திரிய வித்யாலயத்துக்கு  சென்றுவருகின்றனர். அங்குள்ள பள்ளி கட்டமைப்பைப் பார்த்து, காரைக்கால் மாணவர்களிடையே ஏக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறுவதற்கு புதுச்சேரி அரசு விரைவாக பூமங்களம் கிராமத்தில் நிலத்தை கேந்திரிய வித்யாலயத்துக்கு ஒப்படைக்கும் என நம்புகிறோம் என்றார்.
அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, போலகம் தொழில் மைய நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை தரலாமென யோசிக்கப்பட்டது. இது தூரமான பகுதியெனவும், தொழிற்சாலைகள் உள்ள பகுதியெனவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். பூமங்களம் பகுதி நிலத்தை கேந்திரிய வித்யாலயத்துக்கு தருமாறு கோருகின்றனர். இதுகுறித்து புதுச்சேரி முதல்வரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com