காரைக்காலில் 11 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காரைக்கால் மாவட்டத்தின் 75 சதவீதப் பகுதியில் புதன்கிழமை காலை 9 முதல் இரவு 8 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தின் 75 சதவீதப் பகுதியில் புதன்கிழமை காலை 9 முதல் இரவு 8 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
காரைக்கால் மின் துறை நிர்வாகம் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் பகுதி நண்டலாறு பாலம் முதல் நகரப் பகுதியில் மதகடி வரை மின் விநியோகம் இருக்காது என உள்ளூர் தொலைக்காட்சியில் அறிவிப்பு செய்தது. பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. குறித்த நேரத்தில் புதன்கிழமை மின்துறை நிர்வாகம் மின்சாரத்தைத் துண்டித்தது.
உள்ளூர் தொலைக்காட்சியைப் பார்த்தவர்கள் மட்டும் மின்சாரம் இருக்காது என்பதை தெரிந்துகொண்டு முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டனர். பெரும்பான்மையினருக்குத் தகவல் தெரியாததால் கடும் அவதிக்குள்ளாகினர். 
மேலும், காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் தடை இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், குறித்த நேரத்திலோ அல்லது அரை மணி நேரம் பின்னரோ மின்சாரத்தை துறை நிர்வாகம் தரவில்லை. இரவு 8 மணிக்கு மின்சாரம் தரப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி மின் திறல் குழுமம் (பி.பி.சி.எல்) மூலம் வாஞ்சூர் முதல் அரசலாறு பாலம் வரை மின்சாரம் தரப்பட்டது. இந்த பகுதியினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், திருவாரூரிலிருந்து பிள்ளைத்தெரு வாசல் துணை மின் நிலைத்துக்கு வரும் மின்சாரத்தைப் பயன்படுத்தும், காரைக்காலின் 75 சதவீதப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கான பணிக்காகவே மின்சாரம் நிறுத்தப்பட்டதாக மின்துறையினர் கூறினர். ஆனால், மின் நுகர்வோர் அனைவருக்கும் மின்சாரம் தடைபடும் என்ற செய்தி போய்ச் சேரவோ, குறித்த நேரத்தில் மின்சார இணைப்பைத் தரவோ மின்துறையினர் அக்கறை செலுத்தாததால், காரைக்கால் மக்கள், அரசுத் துறையினர், வணிகர்கள், நிறுவனத்தில் பணிபுரிவோர் என பல்வேறு நிலையில் உள்ளோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழல் வரும் காலங்களில் ஏற்படாதவாறு, முறையான தகவல்கள் அனைவருக்கும் போய் சேரவும், ஒருசில மணி நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்தும் வகையிலும் திட்டங்கள் வகுத்துச் செயல்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை மின்துறை நிர்வாகத்தினர் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com