ரங்கசாமி அரசு செய்த தவறான செயல்களால் நாராயணசாமி அரசு பெரும் நிதி தட்டுப்பாட்டைச் சந்திக்கிறது:  அமைச்சர் மு. கந்தசாமி

முந்தைய ரங்கசாமி அரசு செய்த தவறான நடவடிக்கைகளால் நாராயணசாமி அரசு நிதி தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக அமைச்சர் எம். கந்தசாமி கூறினார்.

முந்தைய ரங்கசாமி அரசு செய்த தவறான நடவடிக்கைகளால் நாராயணசாமி அரசு நிதி தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக அமைச்சர் எம். கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி நலத் துறை அமைச்சர் எம். கந்தசாமி, அவரது துறைகள் சார்பில் அலுவலர்களிடையே ஆலோசனை நடத்தும் வகையில் புதன்கிழமை காரைக்கால் வந்தார். வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மற்றும் கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம். கந்தசாமி கூறியது  :
புதுச்சேரியில் அமல்படுத்தப்படும் திட்டங்கள் அதே காலத்தில் காரைக்காலில் நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக கூறப்படுகிறது. மேலும், அரசுத் துறைகளில் நிலவும்  காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டியதும் அவசியமாகிறது. இதுகுறித்து விரிவாக விவாதிக்கும் வகையில் வியாழக்கிழமை புதுச்சேரியில் தலைமைச் செயலர், வளர்ச்சி ஆணையர், அரசுச் செயலர், இயக்குநர்கள் மற்றும் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோருடன் கூட்டம் நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்து  விவாதித்து சரியான முடிவு எடுக்கப்படும்.
புதிதாக ஆள் நியமனம் கூடாது என துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிறைய உள்ளன. இதுகுறித்து துணை நிலை ஆளுநரை நாங்கள் சந்தித்துப் பேச தயாராக உள்ளோம்.
பாப்ஸ்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை இருக்கிறது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கஷ்டத்தை அரசு உணர்ந்துள்ளது. அதேவேளையில், அரசிடம் நிதியில்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும். நிதியை வைத்துக்கொண்டு தராமல் இருக்கவில்லை அரசு. முந்தைய ரங்கசாமி அரசு, ஒரு நிறுவனத்தில் 500 பேர் வேலை செய்யலாம் என்றால், 1,500 பேரை நியமித்துவிட்டது. அதுபோன்ற தவறான செயல்களால், ஊதியம் தர முடியாமல் உள்ளோம். இதேபோன்று, ரங்கசாமி ஆட்சியிலும் ஒரு ஆண்டு காலம் ஊதியம் தராமல் இருந்த நிலை இருந்ததையும் ஊழியர்கள் உணர வேண்டும்.
எங்கள் அரசு நிதி தட்டுப்பாட்டில் தவிப்பதற்கு ரங்கசாமி அரசின் செயல்பாடுகளும், மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மட்டுமே காரணம். இந்த பிரச்னைகளைக் களைந்து நிதியாதாரத்தை திரட்ட அரசு முனைந்து வருகிறது. அதுவரை அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். வேலை நிறுத்தம் செய்தால், மோசமான நிலையே ஏற்படும். 
மக்கள் கடுமையாக அவதிப்படுவார்கள் என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோர் உணர வேண்டும். ரேஷன் அட்டை வழங்கல், மஞ்சள் நிற அட்டையை சிவப்பு நிற அட்டையாக மாற்றுதல் போன்ற கோரிக்கைகளை துறை நிர்வாகம் முறையாக பரிசீலித்து வருகிறது. உரிய காலத்தில் அவை வழங்கப்படும் என்றார் அமைச்சர் கந்தசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com