காரைக்கால் கடற்கரை சுற்றுலாவினர் தங்கும் விடுதியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்: அபிவிருத்தி ஆணையர்

காரைக்கால் கடற்கரையில் கட்டிமுடிக்கப்பட்ட சுற்றுலாவினர் தங்கும் விடுதியை விரைவில் பயன்பாட்டுக்கு

காரைக்கால் கடற்கரையில் கட்டிமுடிக்கப்பட்ட சுற்றுலாவினர் தங்கும் விடுதியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என புதுச்சேரி அபிவிருத்தி ஆணையர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி அரசு செயலரும், அபிவிருத்தி ஆணையருமான அ.அன்பரசு காரைக்காலில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். கடற்கரையில் ரூ.6 கோடியில் மறுசீரமைப்புப் பணியாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாவினர் தங்கும் விடுதி அறைகளைப் பார்வையிட்ட அவர், எஞ்சிய பணிகளை விரைவாக நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மத்திய அரசின் ரூசா திட்ட நிதியில் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரிக்கான விரிவாக்க கட்டடம் கட்டுமானத்தைப் பார்வையிட்ட அவர், கட்டுமானத்தை விரைந்து முடித்து திறப்பு விழா செய்வதற்கான பணிகளை விரைவுப்படுத்துமாறு பொதுப்பணித்துறை பொறியாளர் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.
காரைக்கால் உள்விளையாட்டு அரங்கத்தைப் பார்வையிட்ட பின் வெளி அரங்கு கட்டுமானத்தைப் பார்வையிட்டு, மேற்கொள்ளவேண்டிய பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கவும், திட்டப்பணிகள் தேவைக்கான நிதியாதாரத்தை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்பணித்துறையினரிடம் கேட்டறிந்தார்.
விளையாட்டு அரங்கத்தில் கல்லூரிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தவேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அரங்கை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருநள்ளாறு பகுதி மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனுடன் இணைந்து பல்வேறு இடங்களைப் பார்வையிட்டார். நிலையப் பண்ணையில் மேற்கொள்ளப்படும் பயிர் சாகுபடி, பயிற்சிகள் குறித்தும், நிலையத்தின் லாப முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். நிலையப் பண்ணையில் 60 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுக்கு ரூ.15 லட்சம் மட்டுமே வருவாய் வருகிறது. ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் லாபமீட்டும் வகையில் சாகுபடி முறைகளை மேம்படுத்தவேண்டும் என அமைச்சரும், ஆணையரும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்களை வேளாண் துறையினர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் வருமாண்டுக்குள் மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிலையத்தினர் மேற்கொள்ளவேண்டும் என இருவரும் அறிவுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் அபிவிருத்தி ஆணையர் அ.அன்பரசு மற்றும் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன், பல்வேறு அரசுக் கல்லூரி முதல்வர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் அ.அல்லி உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால் பள்ளி, கல்லூரிகளில் நிலவும் கல்வித் தரம், கல்விக் கூடங்களின் தரம் குறித்தும், மேம்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் அமைச்சரும், ஆணையரும் கேட்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com