காரைக்கால் கல்வி நிலையங்களில் அமைச்சர், செயலர், இயக்குநர் ஆய்வு

காரைக்காலில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோர் திங்கள்கிழமை ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தினர்.

காரைக்காலில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோர் திங்கள்கிழமை ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், கல்வி, வேளாண் அரசு செயலர் அ.அன்பரசு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எல்.குமார் ஆகியோர் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு அரசு மேல்நிûலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
திருநள்ளாறு பகுதி தேனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற இக்குழுவினர், மாணவர்களின் வகுப்பறைகளை சுற்றிப்பார்த்து, ஆய்வுக் கூடங்களை பார்வையிட்டனர். இயற்பியல் துறை ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மாணவர்களிடம் இயற்பியல் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர். பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் மாணவர்கள் கல்விக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தினால், உயர்ந்த மதிப்பெண் பெறமுடியும். லட்சியத்தை அடையும் பாதை திறக்கப்படும் என்பதை மாணவர்கள் உறுதியாக நம்பவேண்டும் என அமைச்சர் கூறினார்.
நெடுங்காடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளிகளுக்குச் சென்ற இக்குழுவினர், பழைமையான வகுப்பறைக் கட்டடங்களைப் புதுப்பிக்கும் வகையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவர்களாக இருக்கும் நிலையில், ஒவ்வொருவர் மீதும் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, பயிற்றுவிப்பை செய்யவேண்டும் என அறிவுறுத்தினர்.
நெடுங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுக்காக சமைத்து வைத்திருந்த பொருள்களை சுவைத்துப் பார்த்தனர். உணவில் காய்கள் பெரிய அளவில் வெட்டிப்போட்டிருப்பது சிறுவர்களுக்கு சாப்பிடும்போது சிரமத்தைத் தரும். சிறிய அளவில் காய்களை வெட்டி சமைக்குமாறு ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து கல்வித்துறை இயக்குநர் எல்.குமார் மட்டும் சுரக்குடி அரசு நடுநிலைப் பள்ளிக்கும், நிரவி ஹூசைனியா உயர்நிலைப் பள்ளிக்கும் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.
காரைக்காலில் முதல் முறையாக கல்வி அமைச்சரும், கல்வித்துறை செயலரும், இயக்குநரும் ஒருங்கிணைந்து பள்ளிகளில் ஆய்வு செய்தது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இது மாணவர்களுக்கு நன்மைகளைத் தர வாய்ப்பிருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆய்வின்போது சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா, காரைக்கால் கல்வித்துறை துணை இயக்குநர் ஜி.சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் அ.அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com