தண்ணீரை சேமிக்க பொதுமக்கள், விவசாயிகள் பழகிக்கொள்ளவேண்டும்: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேச்சு

தண்ணீரை சேமிக்க பொதுமக்கள், விவசாயிகள் பழகிக்கொள்ளவேண்டும் என மலர் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டார்.

தண்ணீரை சேமிக்க பொதுமக்கள், விவசாயிகள் பழகிக்கொள்ளவேண்டும் என மலர் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டார்.
காரைக்காலில் பிப்.16 முதல் 18-ஆம் தேதி வரை மலர், காய்கனி கண்காட்சியில், பெங்களூரு, ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளிலிருந்து சுமார் 20 ஆயிரம் மலர்ச் செடிகள், மரக்கன்றுகள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்துடன் விற்பனையும் செய்யப்பட்டது. வேளாண் துறையால் வைக்கப்பட்டிருந்த செடிகள் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்தன. கண்காட்சியை சுமார் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சி நிறைவு விழாவில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பங்கேற்று கண்காட்சித் தொடர்பான கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கு மற்றும் மலர் சாகுபடி செய்வோருக்கு சாம்பியன்ஷிப் விருது வழங்கி பேசியது:
காரைக்காலில் மலர் கண்காட்சி நடத்தி மக்களை மகிழ்விக்கவும், தோட்டப் பயிரை மேம்படுத்தவும் அரசு உரிய நிதியை ஒதுக்கியது. பொழுதுபோக்காக கண்காட்சியை பயன்படுத்தாமல், பெரும்பான்மையினர் மலர் செடிகள் உருவாக்கம் மற்றும் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும், வேளாண் துறை, வேளாண் அறிவியல் நிலையத்தினரை கேட்டறிந்தது மகிழ்ச்சி.
விவசாயமாகட்டும், தோட்டப் பயிராகட்டும் தண்ணீர் மிக முக்கியம். தண்ணீர் இல்லாமல்போனால் இவற்றில் வெற்றி காணமுடியாது. காரைக்காலில் நிலத்தடி நீர் சில பகுதியில் மட்டும் பயனைத் தருகிறது. மற்ற இடங்களில் காவிரி நீர், மழை நீரை தேக்கிவைத்தால் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எனவே பொதுமக்களும், விவசாயிகளும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.
சொட்டு நீர் பாசன நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். அதுபோல தண்ணீரை கொஞ்சம்கூட வீணாக்காமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. காரைக்கால் மாவட்ட வளர்ச்சிப் பணிக்கு எம்பி தொகுதிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 60 சதவீதம் தொகையை ஒதுக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணனிடம் கோரிக்கையை விடுக்கிறேன் என்றார் அவர்.
விழாவில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ந. கோகுலகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, வேளாண் செயலரும், அவிவிருத்தி ஆணையருமான அ. அன்பரசு, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், கூடுதல் வேளாண் இயக்குநர் கா. மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனவரியில் கண்காட்சி: நிகழ்ச்சியின்போது அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: அடுத்த ஆண்டு முதல் மலர் கண்காட்சி ஜனவரி மாத பிற்பகுதியில் நடத்தவும், 3 நாள்கள் என்பதை 5 நாள்கள் நீட்டிக்கவும் பரிசீலிக்கப்படும். கண்காட்சி நடைபெறும் இடத்தில் தாவரவியல் பூங்கா போன்ற நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேளாண் துறையினர் ஆலோசிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
செடிகள் விற்பனை : மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை வேளாண் துறையினர் திங்கள்கிழமை விற்பனை செய்தனர். மலிவு விலையில் ஏராளமானவர்கள் மலர்ச் செடிகளை வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com