பொங்கல் பண்டிகை: திருநள்ளாறில் பக்தர்கள் வருகை குறைவு

பொங்கல் பண்டிகையையொட்டி, திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நிகழ்வாரம் கணிசமாக குறைந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி, திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நிகழ்வாரம் கணிசமாக குறைந்தது.
கடந்த டிச.19-ஆம் தேதி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிக்கிழமையில் ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் மிகுதியான பக்தர்களும் சென்று தரிசனம் செய்தனர். கடந்த 6-ஆம் தேதி சனிக்கிழமையும் முந்தைய வாரங்களுக்கு இணையாக பக்தர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பேருந்துகள் ஸ்டிரைக் காரணமாக பக்தர்கள் மிகுதியாக திருநள்ளாறுக்கு வரவில்லை. பேருந்துகள் இயங்கத் தொடங்கியும் பொங்கல் பண்டிகையையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், நிகழ்வாரம் சனிக்கிழமை திருநள்ளாறுக்கு பக்தர்கள் வருகை குறைந்தே இருந்தது.
பொங்கல் பண்டிகை காலமாக இருப்பதால், பேருந்துகள் கிடைத்து திருநள்ளாறுக்கு வந்துவிட்டு மீண்டும் செல்வது கடினம் என்பதால், பக்தர்கள் வருகை குறைய காரணமாக கூறப்படுகிறது. பெரும்பாலான பக்தர்கள் கார், வேன், சுற்றுலா பேருந்துகளில் வந்திருந்தனர்.
சனிப்பெயர்ச்சி விழாவுக்காக செய்யப்பட்ட தரிசனத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் அப்படியே தொடர்ந்ததாலும், கட்டண வரிசையில் செல்வோருக்கு பிரசாதப் பை வழங்கல், கட்டணமில்லா தரிசனத்தில் செல்வோருக்கு அன்னதானம் வழங்கல் ஆகியவை வழக்கம்போல் செய்யப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியாக தரிசனம் முடிந்து வெளியேறினர்.
பிச்சை எடுப்போர் தொல்லை குறைந்தது : நளன் குளம் பகுதியில் பிச்சை எடுப்போர் அதிகமானவர்கள் இருந்துகொண்டு, பக்தர்களை துன்புறுத்துவது தொடர்ந்ததால், கடந்த 6-ஆம் தேதி சனிக்கிழமை சுமார் 120 பிச்சைக்காரர்களை, பயன்பாட்டுக்கு வராத பல்நோக்குக் கூடத்தில் அடைத்து, டீ மற்றும் இருவேளை உணவை கோயில் நிர்வாகம் அளித்தது. இந்த நிலையில், நிகழ்வாரம் பிச்சை எடுப்போர் பரவலாக இருந்தும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாததால், கோயில் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com