மருத்துவர் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விபத்தில் சிக்கியவர் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் நடைபெற்ற  தகராறில், மருத்துவர் காயமடைந்தார்.

விபத்தில் சிக்கியவர் உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் நடைபெற்ற  தகராறில், மருத்துவர் காயமடைந்தார்.
சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் சரகத்துக்கு உள்பட்ட கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (34). கூலி வேலை செய்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அதே பகுதியில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரது நண்பர் ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டே சென்றுள்ளனர்.
எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது பைக் உரசியதில் பைக்கில் சென்ற துரை கீழே விழுந்து காயமடைந்துள்ளார். உடனடியாக அவரை காரைக்கால் மாவட்டத்துக்குள்பட்ட  விழுதியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பரிசோதித்த குழுவினர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த மருத்துவர் ஜானகி, அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். அப்போது அவருடன் வந்த சுதிர் என்பவர் ஆத்திரத்தில் மருத்துவமனையில் இருந்த மேஜை, கதவு, இருக்கைகளை அடித்து சேதப்படுத்தியது மட்டும் அல்லாமல், பணியில் இருந்த  மருத்துவர் ஜானகியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மருத்துவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த துரையின்  நண்பர்கள், உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார்,  தகராறில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டத்தினர் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பான புகாரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுதிர் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள்  மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவரை தாக்கியவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோல் சம்பவங்களைத் தடுக்க மருத்துவமனையில் நடைபெறாத வகையிலும் இருக்க, மருத்துவமனையில் புறக்காவல் மையம் அமைத்து, தீவிரமான கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com