ஜூன் 21-இல் பள்ளி திறப்பு: கேந்திரிய வித்யாலயத்தில் ஆய்வக கட்டமைப்புப் பணி தீவிரம்

கேந்திரிய வித்யாலயத்தில் ஆய்வுக்கூட கட்டமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

கேந்திரிய வித்யாலயத்தில் ஆய்வுக்கூட கட்டமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 21 -ஆம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கப்படுகிறது என பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம், நிரவியில் தற்காலிக இடத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 10 -ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், பள்ளியில் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை இல்லாத நிலையில், பிளஸ் 1 சேர்க்கைக்கு கேந்திரிய வித்யாலயா தலைமையகம் அனுமதி தராமல் இருந்தது. மாவட்ட நிர்வாகம் சொந்த ஏற்பாட்டில் ஆய்வுக்கூடம், வகுப்பறைக்கூடம் அமைத்துத் தருவதாக உறுதியளித்ததன் பேரில் கடந்த 2017 -ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்கு அனுமதி தந்தது. ரூ. 30 லட்சம் செலவில்  3 பாடங்களுக்கான ஆய்வுக்கூடம், வகுப்பறைக்கூடத்தை மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மூலம் அமைக்கத் தொடங்கியது.
ஆனால், ஆய்வுக்கூடம் தயாராகாத நிலையில் 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் தவிப்புடன் அடுத்த வகுப்புக்குச் சென்றனர். இதுகுறித்து பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், இக்கட்டுமானங்களை குறிப்பிட்ட காலத்தில் முடித்துத் தரும்படி பொதுப் பணித் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆய்வுக்கூடத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் கடந்த 15 நாள்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளி முதல்வர் வாசகன் திங்கள்கிழமை கூறும்போது, கோடை விடுமுறைக்காலம் நிறைவடைந்து, ஜூன்  21 -ஆம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது. பிளஸ் 1 சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. ஆய்வுக்கூடம் அமைக்கும் பணி தினமும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த 10 நாள்களில் முடித்து ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆய்வகத்தில் பொருத்த வேண்டிய பள்ளி  சாதனங்கள் பெரும்பாலானவை தயார் நிலையில் உள்ளன. மேலும், சில பொருள்கள் வரவழைக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்றார்.
ஆய்வுக்கூடத்தில் மேடை அமைத்தல், மேடையில் கிரானைட் கல் பதிப்பு, கேஸ் குழாய் பதிப்பு, மின் வசதிகள், தரைத்தளம் புதுப்பித்தல் போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் கை கழுவதற்கான சிங்க் பொருத்த வேண்டியுள்ளது. மேலும், வண்ணம் பூசும் பணி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கை அனுமதி கிடைத்த மாணவர்கள், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 சென்ற மாணவர்கள், பள்ளிக்குச் சென்று ஆய்வுக்கூடப் பணியை பார்வையிட்டுத் திரும்புகின்றனர். ஆய்வுக்கூட மேம்பாட்டுப் பணி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com