ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் எம்எல்ஏக்கள் தலையிடக் கூடாது:  அமைச்சர் ஆ. நமச்சிவாயம்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, எம்.எல்.ஏ.க்கள் தலையீடு இருக்கக்கூடாது என அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, எம்.எல்.ஏ.க்கள் தலையீடு இருக்கக்கூடாது என அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.
 காரைக்கால் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளை மீட்பது, மேம்படுத்துவது, நீரை சேகரிப்பது குறித்த ஆலோசனை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் முடங்கியுள்ள நில வணிகம், பத்திரப்பதிவு, மனைகளுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனித்தனியே பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், பி.ஆர்.என். திருமுருகன், கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள், கட்டடப் பொறியாளர்கள், நில வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 காரைக்கால் பகுதியில் நீர் நிலைகளை மேம்படுத்துவது,  அரசுக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் மீட்பது, நீர் சேகரிப்புக்கான வழிமுறைகளை மேற்கொள்வது, தேவையான பகுதிகளில் தடுப்பணை மற்றும் நீர்த் தேக்க அணைகள் கட்டுவது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்.
 நில வணிகம் தொடர்பான கூட்டத்தில் நிலப் பத்திரப் பதிவு, மனை அங்கீகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் புதுச்சேரி அரசால் போடப்பட்ட இரண்டு அரசாணைகள், விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினர். 
இவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து நில வணிகர்களும், கட்டடப் பொறியாளர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி,  கோரிக்கைகளை முன் வைத்தனர். காரைக்காலில் உள்ள நகரமைப்புக் குழும அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஒட்டுமொத்தமாக அதிருப்தி தெரிவித்தனர்.
  கூட்ட நிறைவில் அமைச்சர் ஆ. நமச்சிவாயம் பேசியது:
அரசு ஆவணங்களின்படி, காரைக்கால் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமாக 549 குளங்கள் உள்ளன. ஆனால், 330 குளங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
 நகரப் பகுதிக்குள் உள்ள 79 குளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள 55 குளங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை மேம்படுத்த ரூ.11 கோடிக்கு திட்டமிடப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திட்டத்திற்காக ரூ.1,300 கோடிக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 நீர் நிலைகளை மீட்கவும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு தயாராகவே உள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினர்களின் தலையீடு எந்த வகையிலும் இருக்கக் கூடாது. அப்போதுதான் இதை முழுமையாகச் செய்ய முடியும். 
 2017-ஆம் ஆண்டு ஜனவரி 30 -ஆம் தேதிக்குப் பின்னர் வாங்கப்பட்ட அங்கீகாரமற்ற மனைகளுக்கு, அங்கீகாரம் பெறுவதற்கு காரைக்கால் நகரமைப்புக் குழுமத்திடம் விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் 20 நாள்களுக்குள் அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டு தடைப்பட்டிருந்த பத்திரப் பதிவு பணிகள் மீண்டும் நடைபெறுவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில வணிகம், மனைகள் அங்கீகாரம் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பெருமளவில் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிக்காக மணலை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனை செய்ய யார் யாரெல்லாம் முன்வருகிறார்களோ அவர்களுக்கு அரசு அனுமதி வழங்கும் என்றார். 
தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மத்திய அரசின் ரூர்பன்  திட்டத்தில் திருநள்ளாறு தொகுதியை, நகரத்துக்கு இணையாக மாற்றம் செய்யத் தேவையான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் ஒப்புதல் 2 வாரத்துக்குள் பெறப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com