"சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம்'

மக்கள் சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்றார் திருப்பட்டினம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் கீதாஆனந்தன். 

மக்கள் சுய வருமானத்தை பெருக்கிக்கொள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்றார் திருப்பட்டினம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் கீதாஆனந்தன். 
திருப்பட்டினம் கால்நடை மருந்தக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் நடைபெற்ற, கால்நடைகள்-கோழிகள் கண்காட்சியில் சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கி அவர் பேசியது:
விவசாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்குரிய ஆலோசனைகளை அரசு நிர்வாகம் வழங்கி வருகிறது.
இயற்கை விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிறது. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பொருள்களை வாங்கவும் மக்கள் பெருமளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 
இவ்வாறு இயற்கை முறை விவசாயத்துக்கு கால்நடையின் சாணம் முக்கிய பங்காற்றுவதால், மாடு வளர்ப்பு என்பது அவசியமாகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடு வளர்ப்பதற்கு மக்கள் முன்வரவேண்டும். இடவசதி உள்ளோர் கூடுதலாக வளர்க்கலாம். கிராமப்புற மக்கள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள முன்வரவேண்டும். 
கால்நடைகள் வாங்குவதற்கேற்ப புதுச்சேரி அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கால்நடைத் துறையில் உள்ள திட்டங்கள் கால்நடை வளர்ப்போர் தெரிந்துகொள்வது அவசியம். கால்நடைகளின் ஆரோக்கியத்தின் மீதும் நம்மைப்போன்றே அக்கறை செலுத்தவேண்டுமென்றார் அவர். 
கண்காட்சியில், 135 மாடுகள், 96 கோழிகள் இடம்பெற்றிருந்தன. கால்நடை மருத்துவர் வி. குமரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் மாடு, கோழிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். கால்நடைத் துறை இணை இயக்குநர் ஜி. லதா மங்கேஷ்கர் கண்காட்சி நடத்துவதன் நோக்கம் குறித்து பேசினார். சிறந்த கால்நடைகள், கோழிகள் தேர்வு செய்து 4 பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்பட்டன. 50 பரிசுகளும், கண்காட்சியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com