தொழில்நுட்பக் கல்வி முடித்த காவலர்களுக்கு எழுத்துத் தேர்வு

நவீன தொழில்நுட்ப முறை குற்றங்களைத் தடுத்தல், குற்றவாளிகளைப் பிடித்தல் வகையிலான பணிகளில் ஈடுபட, தொழில்நுட்ப கல்வி முடித்த காவலர்களைப் பணியமர்த்தும் வகையில், திறனறி எழுத்துத்

நவீன தொழில்நுட்ப முறை குற்றங்களைத் தடுத்தல், குற்றவாளிகளைப் பிடித்தல் வகையிலான பணிகளில் ஈடுபட, தொழில்நுட்ப கல்வி முடித்த காவலர்களைப் பணியமர்த்தும் வகையில், திறனறி எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் போலியான ஏடிஎம் தயாரித்துவைத்து மையத்தில் பணத்தை எடுப்பது, முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத வகையில் வீடு, நிறுவனங்களில் திருடுவது மற்றும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களில் பழைய அணுகுமுறைபோல இல்லாமல், நவீன தொழில்நுட்ப உத்திகளைக் கையாளுதல் போன்றவை நடந்துவருகிறது.
இந்த முறையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது, குற்றவாளிகளைக் கண்டறிவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. போலீஸார் விரல்ரேகை பதிவு, மோப்ப நாய் போன்றவற்றின் மூலம் குற்றவாளியை கண்டறியும் பழைய முறையை பின்பற்றுகின்றனர். இதனால் குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக ராகுல் அல்வால் பொறுப்பேற்ற பின்னர், காரைக்காலில் மேற்கண்ட தொழில்நுட்பத்தின் மூலம் நடந்த பல குற்றச் சம்பவங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தொழில்நுட்பக் கல்வி போன்ற உயர்கல்வி முடித்தவர்கள் பலர் காவலராகப் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஆண் மற்றும் பெண் 50 காவலர்களைத் தேர்வு செய்து, இவர்களின் திறனறியும் எழுத்துத் தேர்வு காரைக்கால் மாவட்ட காவல்துறையால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடத்தப்பபட்டது. மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தேர்வுப் பணியை பார்வையிட்டார். தேர்வுக்காக ஒரு மணி நேரம் தரப்பட்டிருந்தது. 50 வகையான கேள்விகளுக்கு காவலர்கள் பதிலளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல்துறை அலுவலர் தரப்பில் கூறும்போது, இந்தத் தேர்வில் 50 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களது விடைத்தாள்கள் அடுத்த சில நாள்களில் திருத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை அதிக தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி நடத்தப்படும் குற்றங்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், இதுபோன்ற குற்றம் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் செயல்பாடுகளில் பயன்படுத்தப்படுவர் என்றனர்.
காரைக்கால் காவல்துறையின் புதிய முயற்சி இது என காவல் அலுவலர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com