எம்எல்ஏ அன்பழகன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பிரெஞ்சிந்திய உடன்பாட்டுக்கு எதிராகப் பேசும் எம்.எல்.ஏ. அன்பழகன் மீது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

பிரெஞ்சிந்திய உடன்பாட்டுக்கு எதிராகப் பேசும் எம்.எல்.ஏ. அன்பழகன் மீது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி. செல்வசண்முகம் வியாழக்கிழமை கூறியது :
பிரெஞ்சிந்திய உடன்பாடுகளின் அடிப்படையிலேயே புதுச்சேரியில் அமைச்சரவை, தனி நிர்வாக அமைப்பு, சட்டப் பேரவை ஆகியவை அமைந்துள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவும் தொடர்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ புதுச்சேரி பிராந்தியங்கள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த உடன்படிக்கையின் சரத்துகளின் அடிப்படையில் பிரெஞ்சிந்திய பூர்வக்குடி மக்கள் உரிய பாதுகாப்பு, சலுகைகள் பெறும் வகையில் இன்றுவரை மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. கடந்த 2006 -ஆம் ஆண்டு காரைக்கால் போராட்டக் குழு நடத்திய போராட்டத்தின் அடிப்படையில், உயர்கல்வியில் பிராந்திய அளவில் இடஒதுக்கீடு கிடைத்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிராந்திய இடஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் கூறியது.
இதைத் தொடர்ந்து, காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு, காரைக்காலுக்கென தனி பட்ஜெட் என்ற கோரிக்கையை போராட்டக் குழு முன்வைத்து போராடி வருகிறது.
தற்போது புதுச்சேரி கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் உள்ளிட்டோரின் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்தது. பிராந்திய அளவில் பணி நியமன ஒதுக்கீட்டுக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார். இது வரவேற்புக்குரியது.  ஆனால், புதுச்சேரியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அன்பழகன், இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், உயர்கல்வியில் காரைக்காலுக்கு பிராந்திய ஒதுக்கீடு தருவதையும் அவர் கண்டித்துள்ளார்.
அவர் எம்.எல்.ஏ.வாக இன்று இருப்பதற்கு பிரெஞ்சிந்திய உடன்படிக்கைதான் காரணம். பிரெஞ்சிந்திய உடன்படிக்கை இந்திய அரசியலமைப்பு சார்ந்ததாகும். காரைக்கால் நலனுக்கு எதிராக குரல் கொடுப்பது, எதிராக செயல்படுவது என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாக அர்த்தம் கொள்ள முடியும். எனவே, இவரது போக்குகள் நீடிக்க வாய்ப்பளிக்காமல், அவரது பதவியை பறிக்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிராந்திய மக்களிடையே மன வேறுபாடு ஏற்படுத்தும் வகையில் அவர் தகவல் வெளியிட்டது, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்திய மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல.
இப்போதும் காரைக்காலில் 50 சதவீத அரசுத்துறையினர் புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்தோராகவே இருக்கின்றனர். காரைக்கால் மக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை. இவரது போக்குகள், பிராந்தியங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும். நீதிமன்றம் பிராந்திய ஒதுக்கீட்டை அனுமதித்துவிட்ட பிறகும் தொடர்ந்து இதன் மீது விமர்சனம் செய்து வருவதையும், இந்திய அரசியலமைப்புக்கு எதிராகப் பேசுவதையும் எம்எல்ஏ  அன்பழகன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றார் செல்வசண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com