ஆசிரியர் காலிப் பணியிடங்களை பிராந்திய அடிப்படையிலேயே நிரப்ப வேண்டும்: முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

காரைக்காலில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை பிராந்திய அடிப்படையிலேயே நிரப்புவதற்கு

காரைக்காலில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை பிராந்திய அடிப்படையிலேயே நிரப்புவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் பகுதி திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக புதுச்சேரி முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.
புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு புதுச்சேரி அரசு முடிவெடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி  ஒப்புதலுக்கு அனுப்பியது. பிராந்திய அடிப்படையில் நிரப்புவதற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது புதுச்சேரியில் உள்ள கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பிராந்திய அடிப்படையில் பணி நியமனம் கூடாது என குரல் எழுப்பி வருகின்றனர்.
நிரந்தரமான பணி அல்ல என்றும், இது ஒப்பந்த அடிப்படையிலானது. மருத்துவத்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டோர், பிராந்திய அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். இதை  தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறை என்றும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பிராந்திய அடிப்படையிலான முடிவு எடுப்பது தவறு அல்ல என பல்வேறு கட்சியினர் காரைக்காலில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் (திமுக), காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா ஆகியோர் கூட்டாக புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
சட்டப் பேரவைத் தலைவர் வி. வைத்திலிங்கம், துணைத் தலைவர் சிவக்கொழுந்து, நலத்துறை அமைச்சர் எம். கந்தசாமி ஆகியோரை பேரவை  உறுப்பினர் கீதா ஆனந்தன் தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிக்குப் பின்னர், காரைக்கால் வந்த கே.ஏ.யு. அசனா கூறியது :
காரைக்காலில் நீண்ட காலமாக பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. புதுச்சேரியிலிருந்து ஆசிரியர்களை காரைக்காலுக்கு நியமிக்கும்போது, சில மாதங்களிலேயே அவர்கள் மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றலாகிச் சென்றுவிடுகின்றனர். இதனால் காலிப் பணியிடத்தை நிரப்ப முடியாமல் உள்ளது. தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை காரைக்கால் பிராந்தியத்தில் தகுதிவாய்ந்த பட்டதாரிகளைக் கொண்டே நிரப்ப வேண்டும். அப்போதுதான் காலிப் பணியிடம் என்பது வராமல் இருக்கும். காரைக்கால் பகுதியினருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்த வாய்ப்பும் கிடைக்கும் என முதல்வரிடம் நானும், எம்.எல்.ஏ.  கீதாஆனந்தனும் வலியுறுத்தினோம். இதுகுறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார் என்றார்.
எம்.எல்.ஏ. கீதாஆனந்தன் கூறும்போது,  ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பணியை பிராந்திய அடிப்படையில் செய்வது தவறில்லை. மருத்துவமனையில் மருத்துவர்கூட இந்த அடிப்படையிலேயே செய்யப்பட்டுள்ளது. பிராந்திய அடிப்படையிலான நியமனத்தை எதிர்ப்பது தவறு என்பதை முதல்வரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. 
காரைக்கால் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக அரசு அறிந்துகொண்டு, அந்த இடங்களை காரைக்காலில் உள்ள பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பவும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, பயிற்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் காலியிடம் என்பது காரைக்காலில் அதிகமாக இருக்கிறது. புதுச்சேரியைச் சேர்ந்தோர் பணி செய்து வருகின்றனர். இவர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றாலும், சில ஆசிரியருக்கு தலைமையாசிரியர் நிலையில் பதவி உயர்வு தந்தாலும், பயிற்சி பெற்ற பட்டாதாரி ஆசிரியர்கள் (டிஜிடி) பணியிடம் அதிகமாக காலியாகும்.
எனவே, இதை உணர்ந்து, புதுச்சேரி அரசு முழுமையாக உள்ளூர் கல்வியாளர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதுசம்பந்தமாக சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், நலத்துறை அமைச்சரிடம் தனியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
காரைக்காலில் பொது பிரச்னை தொடர்பாக முன்னெப்போதும்  இல்லாத வகையில் திமுக, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து முதல்வரை சந்தித்தது, பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com