சித்தர் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபூரணானந்தசுவாமி சித்தர் கோயிலில்

காரைக்கால் அருகே சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபூரணானந்தசுவாமி சித்தர் கோயிலில்  குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், ஊழியபத்து கிராமத்தில் மிகப் பழைமையான,  சித்தர் கோயில் சிதிலமடைந்து புதருக்குள் இருப்பதை பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தனர்.  
கோயில் கண்டறியப்பட்டபோது, இதுகுறித்து அந்த நிலத்திற்கு உரிமையாளரின் சகோதரரான ஆறுமுகம் பிள்ளை (87) கூறும்போது,   பர்மாவிலிருந்து பரிபூரணானந்தசுவாமி என்பவர் 4 தலைமுறை  காலத்திற்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். மருத்துவம் ஏதும் இல்லாத காலத்தில், மக்களின் நோயை குணப்படுத்தும் வகையில் சித்து வேலைகளை அவர் செய்துள்ளார். சித்தராக அவரை மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர். இரவு நேரத்தில் அவரை தரிசிக்கச்  சென்றால், கை, கால்கள் துண்டுத் துண்டாக சிதறிய நிலையிலான உருவமைப்பில் படுத்திருப்பாராம். பகல் நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பாராம்.
எனது பாட்டி அருந்தவத்தம்மாளின் சித்தப்பா, அவரது சிஷ்யராக இருந்துள்ளார். சித்தர் ஜீவசமாதி அடைய முடிவெடுத்தபோது, தன்னை கபால மோட்சம் செய்யக்கூறி, உடல் முழுவதும் மண்ணுக்கு கீழும், தலை மட்டும் தெரிந்த நிலையில் சமாதி அடைந்துள்ளார். சித்திரை மற்றும் ஆடி மாதத்தில் பௌர்ணமி நாளில் குருபூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. சிஷ்யராக இருந்த பாட்டியின் சித்தப்பாவின் சமாதியும் அங்கேயே உள்ளது. எனது சகோதரர் ஒருவரிடம்  இந்த நிலப்பரப்பு சென்றுவிட்டது. அவரது குடும்பம் வெளிநாட்டில் இருந்துவிட்டபடியால், பராமரிப்பு இல்லாமல்போய்விட்டது என்றார்.
இந்நிலையில் ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினர் ஏற்பாட்டில், கோயில் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை கூறும்போது, நன்கொடை மற்றும் குடும்பத்தினர் நிதியாதரவுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்துவருகிறோம். கோயிலில் முருகன், அம்பாள் சன்னிதிகளும் புதிதாக ஏற்படுத்தப்படும். வரும் சித்திரை மாதத்தில்  குடமுழுக்கு செய்யும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. குடமுழுக்குக்குப் பின் சித்தர் கோயிலில் முறைப்படி குருபூஜை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com