மதுப் பழக்கத்தை கட்டுமானத் தொழிலாளர்கள் கைவிட கவுன்சலிங் தரவேண்டும்: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேச்சு

கட்டுமானத் தொழிலாளர்கள் முழுமையாக மதுப் பழக்கத்திலிருந்து வெளிவர, தொழிலாளர் கூட்டங்களில்

கட்டுமானத் தொழிலாளர்கள் முழுமையாக மதுப் பழக்கத்திலிருந்து வெளிவர, தொழிலாளர் கூட்டங்களில் உரிய நிபுணர்களால் கவுன்சலிங் தரவேண்டியது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.
காரைக்காலில் தனியார் நிறுவனம் சார்பில் மகளிருக்கு பெயிண்டிங் தொடர்பான பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும், பெண்களும் கலந்துகொண்டனர்.
பயிற்சியை குத்துவிளக்கேற்றி புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தொடங்கிவைத்துப் பேசியது :
மத்திய அரசாலும், மாநில அரசாலும் திறன் மேம்பாடு என்பது அடிக்கடி அறிவுறுத்தப்பட்டுவருகிறது. தற்போதைய சூழலிலும், எதிர்காலத்திலும் எந்தவொரு துறையில் இருப்போரும் தமது திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த திறன் மேம்பாட்டை அரசு மட்டுமே தரக்கூடியது அல்ல, பல்வேறு தனியார் அமைப்புகளும் மக்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி தருவதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆண்களுக்கு நிகரான பணியை பெண்களும் செய்துவருகின்றனர்.  சென்னையில் பெண்களும் பெயிண்டிங் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படும் செய்தி மகிழ்ச்சியாக உள்ளது. காரைக்காலில் இதுபோன்ற நிலை வரவேண்டும்.
கட்டுமானத் துறையில் மணல் முக்கிய பிரச்னையாக உள்ளது. தமிழகத்திலிருந்தே புதுவைக்கான மணல் பெறமுடியும். நாம் இதற்காக போராடிவருகிறோம். தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. எனினும் இதில் தொடர் முயற்சியை அரசு செய்துவருகிறது.
கட்டுமானத் தொழிலாளர்களில் யாரும் மது அருந்தாமல் வாழ்க்கையை கொண்டு செல்லவேண்டும். மதுப் பழக்கத்தினால் ஏற்படும் சீரழிவுகள் அனைவருக்கும் தெரியும்.
எனவே கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவரும் ஒவ்வொரு சூழலில் கூடி விவாதிக்கும் கூட்டங்களில், மதுப் பழக்கத்தை விடவும், அதிலிருந்து மீளவும், மருத்துவ சிகிச்சை  தொடர்பான விவரம் தரவும் உள்ள நிபுணர்களை அழைத்து கவுன்சலிங்குக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கான ஏற்பாட்டை சங்கம் செய்யவேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம், கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com