காலி மனைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை இடத்தின் உரிமையாளரே அகற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

காலி மனைகளில் தேங்கியிருக்கும் மழைநீர், கழிவுநீரை இடத்தின் உரிமையாளர்கள் உடனடியாக அகற்றவேண்டும் என

காலி மனைகளில் தேங்கியிருக்கும் மழைநீர், கழிவுநீரை இடத்தின் உரிமையாளர்கள் உடனடியாக அகற்றவேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் காவல்துறையினர், பல்வேறு அரசுத் துறையினர் சைக்கிளில் சென்று ஆய்வு செய்து, சீர்கேடுகளைக் கண்டறிந்து அவற்றை களைய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நிகழ்வாரம் சனிக்கிழமை ஆட்சியர் தலைமையில், அதிகாரிகள் குழு காரைக்கால் காமராஜர் சாலை, இடும்பன் செட்டியார் சாலை, வேட்டைக்காரன் தெரு மற்றும் நகரின் பிற குடியிருப்புப் பகுதிகளுக்கு சைக்கிளில் சென்றனர்.
மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து,  நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ்,  பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆட்சியருடன் சென்றனர்.
செல்லுமிடங்களில் உள்ள குளங்கள் தூய்மையாக இருக்கிறதா, கழிவுநீர் தேங்கியிருக்கிறதா, குப்பைகள் சாலையோரத்தில் போடப்படுகிறதா, தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறதா, கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் கொட்டிவைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறதா என்ற பல்வேறு வகையில் அதிகாரிகள் கிராமங்களில், ஒவ்வொரு வீதியாகச் சென்று பார்வையிட்டனர்.
கிராமத்தில் உள்ள பொதுமக்களையும் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பல்வேறு அறிவுறுத்தல்களை செய்தனர். காமராஜர் சாலையில் டயர் வல்கனைசிங் செய்யும் மையத்தில் டயரில் தண்ணீர் தேங்கியிருந்ததைப் பார்த்த ஆட்சியர், இது கொசு உற்பத்திக்கான காரணியாக இருக்கிறது எனவும், நிறுவனத்தினர் அவ்வப்போது அதை சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
இடும்பன் செட்டியார் சாலையில் சாக்கடையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதைப் பார்த்த ஆட்சியர், நகராட்சி ஆணையர் உரிய விசாரணை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
நகராட்சி சார்பில், ஜேசிபி இயந்திரம் மூலம் வடிகால்கள் தூர்வாரப்படும் பணியை பார்வையிட்ட ஆட்சியர், பருவமழை தொடங்குவதற்குள் இந்த பணிகளை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
சில வீடுகளின் அருகே காலி மனைகளில் கழிவுநீர் தேங்கியிருப்பதைப் பார்த்த அவர், அதை இடத்துக்குரியவர்களே மோட்டார் பம்பு மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகத்தினர் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் பலரை சந்தித்த ஆட்சியர், டெங்கு கொசு உற்பத்திக்கான காரணிகளை பொதுமக்கள் கண்டறிந்து அழிக்க வேண்டும். வீட்டுப் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் பொதுமக்ளுக்கு இடையூறு இல்லாமல் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் சாக்கடைகள் அடைபட்டு பெரும் பாதிப்பு ஏற்படுவதை மக்கள் உணர வேண்டும்  என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com