தக்களூர் அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்: பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தக்களூர் அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டுமென

தக்களூர் அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டுமென பொதுப்பணித்துறையினருக்கு அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
காரைக்கால் பகுதி தக்களூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளிக்கு புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சனிக்கிழமை சென்றார். அவருடன் சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (பொ) ஏ. ராஜசேகரன், முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி, கல்வி வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேசன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
பள்ளியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு கூடுதலாக மாணவர்  சேர்க்கை நடைபெற்றுள்ளது. வகுப்பறைகள் போதுமானதாக இல்லை, கழிவறைகளைப் புதுப்பித்துக் கட்டித்தர வேண்டும் என பேரவை உறுப்பினர், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். வகுப்பறைகள், கழிவறைப் பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர், இடவசதிக்கேற்ப கூடுதலாக வகுப்பறைகள் கட்டித்தரவும், கழிவறையை நவீன முறையில் கட்டித்தரவும் உரிய மதிப்பீடு தயார் செய்து, நிதி ஒதுக்கி பணிகளைச் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
வரும் கல்வியாண்டில் மேலும் அதிகமான மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் விதத்தில், கல்வித்துறையினர் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, தக்களூர் கிராம மக்கள் அமைச்சரை சந்தித்து, பள்ளி அருகே உள்ள குளத்தைத் தூர்வார வேண்டும் என கேட்டுக்கொண்டனர். குளத்தைப் பார்வையிட்ட அமைச்சர், கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த பணியை செய்ய முன்வரவேண்டும். இந்த பணியில் நானும் கலந்துகொள்வேன். அரசு நிர்வாகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல், நமது பகுதியில் உள்ள நீர்நிலைகளை நாமே குழுவாகச் சேர்ந்து சுத்தப்படுத்தி, நீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com