காரைக்கால் நகரம் எப்படி இருக்கவேண்டும்: கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

காரைக்கால் நகரம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து தயாரித்த ஆய்வறிக்கையை கோவை கல்லூரி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தனர்.

காரைக்கால் நகரம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து தயாரித்த ஆய்வறிக்கையை கோவை கல்லூரி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தனர்.
கோயம்புத்தூரில் இயங்கிவரும் எஸ்.வி.எஸ். கட்டடக் கலை கல்வி நிறுவனத்தை சேர்ந்த 38 மாணவ, மாணவியர், 3 மாத காலம் காரைக்காலில் தங்கி, காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தினர் மற்றும் பொதுமக்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, காரைக்காலில் முந்தைய நிலை, தற்போதைய நிலை, எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வறிக்கை தயார் செய்தனர்.
இதை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
ஆய்வறிக்கை குறித்து மாணவர்கள் பேசும்போது, காரைக்கால் அகலமான சாலைகள், முறையான சாக்கடை, வடிகால் அமைப்பு, காற்றோட்டமுள்ள கட்டடங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. தற்போது சாலையோர வாய்க்கால்கள் திறந்திருப்பதால் குப்பைகள், நெகிழிகள் போன்றவை கலந்து, அடைப்பட்டு கழிவுநீர்  தேங்குகிறது. கழிவுநீர் முறையாக செல்லவும், மற்ற நீர்நிலைகளில் இருந்து தண்ணீர்  முறையாக கடலில் கலக்கவும் உரிய ஆலோசனைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலைகளில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. வாகனங்கள் பார்க்கிங் செய்ய தனியாக இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழைய கட்டடங்களை, வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டுவோர், காற்றோட்ட வசதி, வெளிச்ச வசதி குறைபாட்டுடன் கட்டுமானத்தை செய்கிறார்கள். இதுகுறித்து நகரமைப்புக் குழுமத்தினர் அனுமதி தரும்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதி ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி சுற்றுலா மேம்பாட்டுக்கான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழைமையான வீடுகள், கட்டடங்களை பராமரிக்க சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினால் பழைமையான கலாசாரம் அழிவை நோக்கி செல்வதை தடுக்க முடியும். இது வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் அரியது என மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் தயாரித்த ஆய்வறிக்கையை ஆட்சியர் ஆர். கேசவனிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது,  காரைக்காலில் பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், மாணவர்கள் தயாரித்தளித்த ஆய்வறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு உதவியாக இருக்கும். மாணவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
காரைக்கால் நகரமைப்புக் குழும அதிகாரி பிரேம்ஆனந்த், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி. சந்தனசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com