சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: நகராட்சி நடவடிக்கை 

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், காரைக்கால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளர்களுக்கு

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், காரைக்கால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சாலைகளில் அதிகளவில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் பன்றிகளால் விபத்துகள் ஏற்படுவதாக பலர் புகார் தெரிவித்ததையடுத்து, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். 
இதைத் தொடர்ந்து, காரைக்கால் நகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கும் பணியை தொடங்கியது.
இதுகுறித்து ஆணையர் எஸ். சுபாஷ் கூறியது :  சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகனத்தில் செல்வோர் விபத்தை சந்திக்க நேரிடுவதாக மக்களுக்கு பல்வேறு வகையில் நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தவிர, பெரிய வாகனங்கள் மோதி கால்நடைகள் உயிரிழப்பும் ஆங்காங்கே நிகழ்கிறது. எனினும், கால்நடை வளர்ப்போர் அதை பொருட்படுத்துவது கிடையாது.
ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வருகிறோம். ஒரு நாளில் மட்டும 10 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் ஒரு மாட்டுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் ஏற்கெனவே விதிக்கப்பட்டு வந்துள்ளது. இதை பின்பற்றுவதோடு, ஆட்சியரின் கருத்துப்படி கால்நடை உரிமையாளர்கள் மீது நகராட்சி விதிகளின்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை, தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். சாலையில் திரியவிடுவதன் மூலம் நகரத்தின் தூய்மை கெடுவதுடன், பொதுமக்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதை உணர்ந்து செயல்படவேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com