தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: ஆட்சியர் கவனம் செலுத்த வலியுறுத்தல்

மேலகாசாக்குடி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து

மேலகாசாக்குடி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
காரைக்கால் மாவட்டம், மேலகாசாக்குடி பகுதியில் இயங்கிவரும் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் பணியாற்றும் நிறுவன ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஆலை நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இவர்களது போராட்டத்தை ஆதரித்து மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கச் செயலர் க.தேவமணி  பேசினார்.
பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது : மேலகாசாக்குடி பகுதியில் இயங்கிவரும் வைகை இண்டஸ்ட்ரீஸ்  நிறுவன ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 37 பேர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றிவருகிறோம். தொழிலாளர் பாதுகாப்புக்காகவும், உரிமைகளை பெறவும் பாட்டாளித் தொழிற்சங்கம் அண்மையில் தொடங்கினோம். தொழிற்சங்க பலகை வாயிலில் அமைத்து, கொடியேற்றம்  செய்யப்பட்டது.
ஆலை நிர்வாகத்தின்  அதிகாரிகள் சிலர், இவற்றை அகற்றிவிட்டனர். போலீஸார் சமாதானம் செய்த வகையில் இவை மீண்டும் அதே பகுதியில் அமைக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர், இந்த சங்கத்தில் அங்கத்தினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு இனி வேலை இல்லை என கூறி வெளியேற்றினர். தவிர, வெளியூர் ஆட்களை வைத்துக்கொண்டு ஆலையை நடத்தி வருகின்றனர். இதனால், தொழிலாளர்கள் ஆலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தினமும் 12 மணி நேரம் வேலை செய்கிறோம். இஎஸ்ஐ, இபிஎஃப் போன்ற சலுகைகளும் தரப்படவில்லை. எனவே, இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com