மின் துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காரைக்கால் மின் துறை

காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காரைக்கால் மின் துறை ஊழியர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் உத்தரவின்படி, புதுவை மின் துறையின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைப்பு செய்யும் விதத்தில், நியமன விதியை திருத்தும் முயற்சியில் புதுச்சேரி அரசு ஈடுபட்டது. தாங்கள் வாங்கும் ஊதியத்தில் எந்த குறைவும் இருக்கக் கூடாது எனவும், இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி அனுமதி பெற வேண்டி மின்துறை ஊழியர்கள் புதுச்சேரி அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த  ஆகஸ்ட் மாதம் இறுதி வரை பேச்சுவார்த்தையின்படி, ஊழியர்கள் அனைத்துப் போராட்டங்களையும் ஒத்திவைத்திருந்தனர். எனினும், கோரிக்கைகள் நிறைவேற்றாததைக் கண்டித்து, காரைக்கால் மின் துறை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக் குழுவைச் சேர்ந்த வி. வேல்மயில் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, பி. பழனிவேல், பி. கண்ணதாசன், கே. லெனின், பி. அருணாசலம், எம். கேசவன், எம். பாலசுப்ரமணியன்,  எச். இக்பால், எம். ஆரோக்கியநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். ஒருநபர் குழு பரிந்துரைப்படி ஊழியர்கள் பெற்றுவரும் ஊதியத் தகவலை மத்திய அரசுக்குத் தெரிவித்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். இளநிலைப் பொறியாளர், டிமேன், போர்மேன், டெஸ்டர், மின் பாதை உதவி ஆய்வாளர், வயர்மேன், பில் வசூலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை புதுச்சேரி அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். பருவமழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க, அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டோரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துப் பேசினர். காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் வி. ஆனந்தன், செயலர் ஜெ. சிவகணேஷ் ஆகியோர் போராட்டத்தை  நிறைவு செய்து பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com