பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வடிகால்கள், சாலைகள் சீரமைக்கப்படுமா?

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், காரைக்காலில் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், காரைக்காலில் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் வடிகால்கள், சாலைகளை துரிதகதியில் சீர்படுத்த புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது, நீர் மேலாண்மையில் சிறந்த உத்திகள் கையாளப்பட்டுள்ளது வரலாற்றுக் குறிப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கம், விளை நிலங்கள் யாவும் விலை நிலங்களாக மாறியது மற்றும் தண்ணீர் வடியக்கூடிய வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால், காரைக்கால் மேற்கு எல்லையில் தண்ணீர் வருவது முதல் கடலில் கலப்பது வரை பெரும் சிக்கலான நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுவிட்டது.
காரைக்கால் நகருக்குள் மட்டும் பிரதான வடிகால் வாய்க்கால்களாக காரைக்கால் வாய்க்கால், அன்னுசாமி வாய்க்கால், கும்சக்கட்டளை வாய்க்கால் உள்ளிட்டவை உள்ளன. கடல் பகுதி வரை இந்த வாய்க்கால்களின் தூரம் ஏறக்குறைய 3 கி.மீட்டர். நகருக்குள் புகுந்தவாறு செல்லக்கூடிய இந்த வாய்க்கால்களின் பெரும்பான்மையான பகுதிகள் அடைப்பட்டுவிட்டது. பருவமழைக் காலத்தில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், மேற்கண்ட வாய்க்கால்கள் மூலம் கடலுக்கு செல்லும் தண்ணீர், அண்மை காலமாக வாய்க்கால்கள் அடைப்பட்டதால், நகருக்குள் தண்ணீர் தேங்கிவிடுகிறது.
கேரளம் தந்த பாடம் : அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனோடு காரைக்காலை ஒப்பிட்டு, பருவழைக்குள் வடிகால்கள் ஆக்கிரமிப்பை முறையாக அகற்றிடவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலும், சமூக வலைதளங்களின் பல்வேறு குழுக்களிலும் விவாதிக்கப்படும் முக்கிய பொருளாக விளங்குகிறது.
பருவமழைக்கு முன்பாக செய்ய வேண்டியவை: நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கயிருப்பதாகக் கூறப்படுகிறது. காரைக்காலில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட வேண்டும். கட்டட ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தேவையான நடவடிக்கைளை வேண்டும். நகரப் பகுதியில் உள்ள சிதிலமடைந்த சாலைகளை விரைவாக சீர்செய்ய வேண்டும். ஆறுகளின் கடலோர முகத்துவாரத்தை, மண் அடைப்பு இல்லாமல் தூர்வார வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகம்  சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கூறியது : காவிரி நீர் வரத்துக்கு முன்பாக காரைக்காலில் வாய்க்கால்களைத் தூர்வார ரூ.45 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்தது. கூடுதலான பணிகள் செய்திருப்பதால் ரூ.1 கோடி வரை மேலும் தேவைப்படுகிறது. காரைக்காலில் உள்ள வாய்க்கால்களை முறையாக தூர்வாரவேண்டியதன் அவசியம் குறித்து, அண்மையில் புதுச்சேரியில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
தவிர, சாலைகள் பல மோசமான நிலையில் உள்ளதை தெரிவித்து, இதைச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளேன். 
மேலும், காரைக்காலில் பேரிடர் மேலாண்மைக் குழுவில் அதிகாரிகள் உள்ளிட்ட பணியிடங்கள் பல காலியாக இருக்கின்றன. இதனை நிரப்பவும் கேட்டுக்கொண்டுள்ளேன். அரசு விரைவாக இந்த திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கும் என கூறியுள்ளதால், நிதி கிடைத்தவுடன் போர்க்கால அடிப்படையில், திட்டம் வகுத்து சீரமைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் 
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com