ரஃபேல் போர் விமான விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக்

ரஃபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், புதுச்சேரிக்கான மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கூறினார்.

ரஃபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், புதுச்சேரிக்கான மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கூறினார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் நரேந்திர மோடி அரசு ஊழல் புரிந்துள்ளதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் உண்மை விளக்கக் கூட்டம் காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி பிரதேசக் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
சிறப்புப் பிரதிநிதியாக முகுல் வாஸ்னிக் கலந்துகொண்டு பேசியது:
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்பது பொய்த்துவிட்டது. விவசாயிகளின் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மானியம் தருவதாக அளித்த வாக்குறுதி வெற்று வாக்குறுதியாகிவிட்டது. நாட்டில் பல பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகின்றன.
வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறியதும் இல்லாமல் போய்விட்டது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுவிட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் 2013-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டில் உள்ள நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தார். ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆகும். ஆனால், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, 36 விமானங்கள் ரூ.1,670 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலம் ரூ.41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையிடமோ, அமைச்சரவையிலோ எந்தவித ஆலோசனையுமின்றி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ஊழலை மோடி அரசு மூடி மறைக்கிறது. இதுதொடர்பாக எந்தவித விசாரணையையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தினால், உண்மை வெளிவரும். வருகிற 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ராகுல்காந்தி பிரதமராவார் என்றார் அவர்.
புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி பேசியது:
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ரூ.41ஆயிரம் கோடி ஊழல் புரிந்துள்ளது பாஜக அரசு. போஃபர்ஸ் ஊழலை ராஜீவ்காந்தி புரிந்தார் என பாஜக பொய் குற்றச்சாட்டு கூறியது. அதில் உண்மை இல்லை என பின்னர் தெரியவந்தது. ஆனால் ஊழலே செய்யமாட்டோம் எனக் கூறி வந்த நரேந்திர மோடி பகிரங்க ஊழல் செய்துள்ளார். இதுகுறித்த கேட்டால், ரகசியம் என்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர். ரஃபேல் போர் விமானம் பராமரிப்பு செலவாக ரூ.1 லட்சம் கோடி ஒப்பந்தம் செய்துள்ளார் மோடி. இங்கிலாந்து நிறுவனம் ஒன்று, பிரான்ஸ் நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் 20 சதவீதம் குறைத்துத் தருவதாக கூறியதை மோடி அரசு ஏற்கவில்லை. ரஃபேல் விவகாரத்தில் கையூட்டு பெற்று பலனடைந்துள்ளது மத்திய அரசு என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம்.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ராகுல்காந்தி பிரதமராக வருவார். ஒவ்வொருவரும் அந்த மாற்றத்தை ஏற்படுத்த தயாராகவேண்டும். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை நிறுத்தும் வேட்பாளர் வெற்றிக்கு அனைவரும் பாடுபடவேண்டும் என்றார் நாராயணசாமி.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எம்.கந்தசாமி, காங்கிரஸ் பொதுச்செயலரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக புதுச்சேரி பிரதேச முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவாக மாவட்டத் தலைவர் அ.பாஸ்கரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com