விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி காரைக்கால் நகரில் 53 இடங்களில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், சனிக்கிழமை ஊர்வலமாக


விநாயகர் சதுர்த்தியையொட்டி காரைக்கால் நகரில் 53 இடங்களில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், சனிக்கிழமை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கிளிஞ்சல்மேடு கடல் பகுதியில் கரைக்கப்பட்டன.
காரைக்கால் ஸ்ரீ சக்தி விநாயகர் விழா குழுவும், மாவட்ட இந்து முன்னணியும் இணைந்து காரைக்கால் நகரின் பல்வேறு இடங்களில் 53 விநாயகர் சிலைகளைக் கடந்த 13-ஆம் தேதி ஆவாஹனம் செய்து பூஜை செய்துவந்தது. ஸ்ரீ சக்தி விநாயகர் வழிபாட்டில் முதல் நாள் திருமுறை பாராயணம், 2-ஆம் நாள் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடத்தப்பட்டது.
பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் 3-ஆம் நாள் கடலில் கரைக்கும் வகையில், சனிக்கிழமை பகல் 12 மணியளவில் இவையனைத்தும் காரைக்கால் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயில் அருகே ஒருங்கிணைக்கப்பட்டன. விநாயகர் ரதத்துக்கு முன்பாக பல்வேறு வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியே காரைக்கால் பகுதியில் உள்ள கிளிஞ்சல்மேடு கடற்கரைப் பகுதிக்கு மாலை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கிராமப் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பொதுமக்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஒவ்வொன்றாக படகு மூலம் கடலுக்குள் கொண்டுசெல்லப்பட்டு (விசர்ஜனம்) கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தில் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கே.எஸ்.விஜயன், ஸ்ரீ சக்தி விநாயகர் விழா மத்தியக் கமிட்டி தலைவர் வி.வெங்கடாசலம் உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பின் பல்வேறு நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவந்த விநாயகர் சிலைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவை கடந்த 13 மற்றும் 14-ஆம் தேதி வரை கடல் மற்றும் ஆறுகளில் கொண்டு சென்று கரைக்கப்பட்டது.
காவல்துறை தடையால் ஊர்வலம் திடீர் நிறுத்தம் : காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து 53 விநாயகர்களும் சனிக்கிழமை பகல் 12 மணியளவில் புறப்பாடு செய்யப்படும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து சிலைகள் ஏழை மாரியம்மன் கோயில் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டன. காரைக்கால் டிராமா கொட்டகைத் தெருவில் வைக்கப்பட்டிருந்த மும்மூர்த்தி விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு காவல்துறை திடீர் தடை விதித்தது. 2016-ஆம் ஆண்டு இந்தப் பகுதி விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டது. இந்து முன்னணி தலைவர் கே.எஸ்.விஜயன், பாஜக மாநில செயலர் எம்.அருள்முருகன் ஆகியோர் காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டியை சந்தித்துப் பேசினர். காவல்துறை விதித்த தடையில் உறுதியாக இருந்ததால், 53 சிலைகளுடன் ஊர்வலம் புறப்படாது என்ற முடிவை எடுத்து, அந்தந்தப் பகுதிக்கு திரும்புமாறு இந்து முன்ணணி நிர்வாகிகள், சிலை பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் ஏழை மாரியம்மன் கோயில் நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக மீண்டும் காவல்துறையினர் பேச்சு நடத்தினர். மும்மூர்த்தி விநாயகர் சிலை பொறுப்பாளர்கள், இந்து முன்னணியினரிடம் உறுதிமொழி கடிதம் பெற்றுக்கொண்டு அனுமதியளித்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து சிலைகளும் ஊர்வலமாக கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com