திருப்பட்டினத்தில் குடிநீர் கட்டணம் செலுத்தாதோர் இணைப்பு துண்டிப்பு

திருப்பட்டினத்தில் குடிநீர் வரியை நீண்ட காலமாக செலுத்தாதவர்களின் இணைப்பை கொம்யூன்

திருப்பட்டினத்தில் குடிநீர் வரியை நீண்ட காலமாக செலுத்தாதவர்களின் இணைப்பை கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் செவ்வாய்க்கிழமை துண்டிப்பு செய்தது.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை செயலர் மற்றும் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் உத்தரவின்படி கொம்யூன் பஞ்சாயத்துகளில், குடிநீர் மற்றும் வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி வசூலிப்பு தீவிரமாக நடைபெறுகிறது.
திருப்பட்டினத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்துமாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதை  பொருட்படுத்தாமல் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ்  தலைமையில் பொறியாளர் பி. மெய்யழகன், வருவாய் ஆய்வாளர் இ. வீரசெல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை 5-க்கும் மேற்பட்டோரின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து ஆணையர் கூறும்போது, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு குடிநீர், வீட்டு வரி, தொழில் வரியின் மூலம் பல லட்சம் ரூபாய் வரவேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவை இருக்கிறது. சில மாதங்கள் நிலுவை வைத்திருப்போருக்கு சிறப்பு முகாம் வரும் 28 முதல் 30 -ஆம் தேதி வரை கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட ஆண்டுகளாக நிலுவை வைத்திருப்போருக்கு குறிப்பிட்ட அவகாசம் தரப்பட்டும், அவர்கள் அலட்சியப்படுத்தியதால், துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரி பாக்கி வைத்திருப்போர் உடனடியாக பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். தவறினால் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com