வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
By நாகப்பட்டினம் | Published on : 14th November 2015 07:01 AM | அ+அ அ- |
சென்னை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கு விசாரணையின் நிறைவில், வேளாங்கண்ணி பேருந்து நிலையம், உத்திரியமாதா கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, நாகை வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயராஜ், கீழ்வேளூர் வட்டாட்சியர் சுந்தரவடிவேல் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய்த் துறை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை வேளாங்கண்ணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் மேற்கொள்ள முயன்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் தங்கள் விடுதிகளில் தங்கியுள்ள வெளியூர் பயணிகள் பாதிக்கப்படக்கூடும் என விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, வருவாய்க் கோட்டாட்சியர் ஜெயராஜ், விடுதி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தையின் நிறைவில், ஆக்கிரமிப்பில் உள்ள விடுதிக் கட்டங்களை விடுதி உரிமையாளர்கள் வரும் ஓரிரு நாள்களில் தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்வதெனவும், முதல் கட்டமாக எளிதில் அகற்றக் கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர், விடுதிகளின் முன்புறங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரைகளை அகற்றும் பணி வருவாய்த் துறை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் தலைமையில், வேளாங்கண்ணி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இப்பகுதிகளில் சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேலும் சில நாள்கள் நடைபெறும் எனவும் வருவாய்த் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.