கோயில்களில் சனி மகா பிரதோஷம்

வேதாரண்யம் பகுதியில் உள்ள சிறப்பு பெற்ற சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் பகுதியில் உள்ள சிறப்பு பெற்ற சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கார்த்திகை மாத தேய்பிறையில் சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருவதால் மகா பிரதோஷமாகக் கருதப்படுகிறது.
வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பிரதோஷ வழிபாட்டின்போது இறைவன் திருமறைக்காட்டார்,நந்தீஸ்வரருக்கு ஒரேநேரத்தில் தீபாராதனை நடைபெற்றது. சனிப் பிரதோஷ விரதம் மேற்கொண்ட மக்கள் ஏராளமாகப் பங்கேற்று வழிபட்டனர்.
பஞ்சபாண்டவர்களால் வழிபடப்பட்டதாகக் கூறப்படும் பஞ்சநதிக்குளம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரபாஷினி உடனுறை ஸ்ரீ தனுஷ்கோடீஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதேபோல, வேதாரண்யம் பகுதியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில்...
சீர்காழி சட்டைநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி மகாபிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷநாயகர், நாயகி பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சீர்காழி கடைவீதியில் உள்ள ஆதிஇராகு ஸ்தலமான பொன்னாகவள்ளி உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோயில், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில்,திருவெண்காடு பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில் ஆகிய கோயில்களிலும் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
குத்தாலத்தில்...
திருவாவடுதுறையில் அதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரம்மாண்ட நந்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் வலம் வந்தார். இதில் திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com